29

29. திருவடிக் கண்ணி

 

      இஃது ஒரு பொருள்மேல் வந்த பஃறாழிசைக் கண்ணி, தாழிசைக் கண்ணி - தாழிசையாகிய கண்ணி யெனக் கொள்க.

 

தாழிசை

2939.

     மின்னிடையாள் காண விளங்குமன்றி லாடுகின்றாய்
     என்னுடையா யுன்ற னிணையடிதான் நோவாதா.

உரை:

     மின்னற் கொடி போன்ற இடையையுடைய உமையவள் காண ஒளி விளங்கும் அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானே, என்னை அடிமையாக வுடையவனே, நெடுங்காலமாக ஆடுகின்ற உன்னுடைய இரண்டாகிய திருவடிகள், நோதல் இல்லையோ, கூறுக. எ.று.

     தில்லையம்பலத்தில் உமாதேவி காணச் சிவபெருமான் திருக்கூத்தாடுகின்றான் என்று, சான்றோர் புகழ்வதால், “மின்னிடையாள் காண விளங்கு மன்றில் ஆடுகின்றாய்” என்று விளம்புகிறார். “கண்டங் கரியாள் கருணை திருவுருக் கொண்டங்கு உமை காணக் கூத்துகந்தானே” (திருமந். 2732) எனத் திருமூலரும், 'குயிலாலும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கத் கூத்தாட வல்ல குழகர்” (வீழி) எனத் திருநாவுக்கரசரும் பிறரும் குறித் தோதுகின்றார்கள். பொன்னம்பலமாதலால் “விளங்கும் மன்று” எனக் கூறுகின்றார். திருவுருக் கொண்டு மன்றின் கண் நின்றாடுகின்றானாதலால், “உன்றன் இணையடிதான் நோவாதோ” என்று இயம்புகின்றார். இவ்வாறே மதுரையிற் பாண்டி வேந்தனொருவன் திருவடி நோமென்று வருந்தினமைக்கு இரங்கி கூத்தப்பிரான் கால் மாறியாடினான் என்று திருவிளையாடற் புராணம் உரைப்பது காண்க.

     (1)