2942.

     அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
     இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா.

உரை:

     அன்பராயினார் சிவப் பேரின்பம் எய்துதல் வேண்டி அம்பலத்தில் ஆடல் புரிகின்ற பெருமானே, இன்பவுருவாக வுள்ள உனது இரண்டாகிய திருவடி நோதல் இல்லையோ. எ.று.

     அன்பரானவர்க்கு அந்த அன்பே சிவஞானமாதலின், அவர் பெறக் கடவது பேரின்பமாதலால், “அன்பர் இன்பம் கொள்ள அம்பலத்தேயாடுகின்றாய்” என அறிவிக்கின்றார். இறைவனுக்கு இன்பமே யுருவமாதலால் “இன்புருவா முன்றன் இணையடி” என இயம்புகின்றார். “சாற்றுங்கால் - சர்க்கரைக் கின்றிப் புருவ மன்றி எழிலுருவம் வேறுண்டோ, இன்புருவமே இறைக்கும் என்” (துகளறு) எனச் சீர்காழிச் சிற்றம் பல நாடிகள் கூறுவது காண்க.

     (4)