2943. நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்
மாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா.
உரை: நூலறிவின் பயனாக எய்தும் நுண்ணுணர்வுடைய ஞானிகள் நோக்கி மகிழத் திருநடம் புரிகின்றாயாயினும், திருமாலும் காண்பதரிதாகிய உனது மலர் போன்ற திருவடி நோதல் இல்லையோ. எ.று.
பல நல்ல நூல்களைக் கற்பதும் கேட்பதும் இயற்கை யறிவை நுண்ணி தாக்குவதாகலின், “நூலறிவாம் நுண்ணுணர்வு” எனவும், அந்த நுண்ணறிவு உண்மை ஞானமாய், சில வழிபாட்டுக் கேற்புடையதாதல் பற்றி, “நுண்ணுணர்வின் நோக்க நடமாடுகின்றாய்” எனவும் இசைக்கின்றார். நுண்ணுணர்வு நல்காத நூலறிவு பயன்படா தென்றற்கு, “அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாததோர் கூத்து” (அதிகை) எனத் திருநாவுக்கரசரும், “இமையோர் பெருமான் நுண்ணுணர்வால் வழிபாடு செய்யும் காலுடையாள்” (கீழைத் திருக்காட்டு) என ஞானசம்பந்தரும் கூறுவர். திருமால் காண மாட்டா தொழிந்த திருவடி என்றற்கு “மாலறியா வுன்றன் மலர்ப்பாதம்” என வழுத்துகின்றார். “மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே, நூலே நுழைவரியான்” (தெள்ளேணம்) என மணிவாசகர் மொழிவது காண்க. (5)
|