2944. எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்
வள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா.
உரை: இகழ்பவர் இகழ்ச்சி கெடுமாறு அம்பலத்தின்கண் இன்ப நடனம் புரிகின்றாயாயினும், அருள் வள்ளலாகிய உனது பூப்போன்ற திருவடி நோதல் இல்லையோ. எ.று.
கூத்தும் இசையும் காமநோய் விளைவிப்பன என இகழ்பவருண்மைபற்றி, “எள்ளலற அம்பலத்தே இன்ப நடம் ஆடுகின்றாய்” என வுரைக்கின்றார். “கிளை நரம்பிசையும் கூத்தும் கேழ்த்தெழுந்தீன்ற காம விளை பயன்” (சீவக. 2598) எனப் பிறரும் கூறுவதனாலறிக. இன்ப நடம்-ஞானப் பேரின்பம் நல்கும் திருக்கூத்து. பழிப்பவர் புகழ்பவர் யாவர்க்கும் அருள் செய்தலால் “வள்ளலே” எனத் துதிக்கின்றார். மலர் அடி - தாமரை மலர் போலும் திருவடி. (6)
|