2947.

     அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய்
     சிவமே நினது திருவடிதான் நோவாதா.

உரை:

     உலகியலின்பங்கள் வீணுற்றழிய மெய்யான சிவானந்தத்தை அன்பராயினார் பெற்று மகிழுமாறு திருக்கூத்தாடுகின்ற பெருமானாகிய சிவபரம் பொருளே, இத் திருக்கூத்தால் உன் திருவடி நோவாதில்லையோ. எ.று.

     சிவஞானத்தால் அன்பர்கள் பொய்யாய உலகியல் இன்பங்களை வெறுத்துத் துறத்தலால், அவை நுகர்வாரின்மையின் வீணே கெட்டழிவது பற்றி, “அவமே கழிந்து” எனக் கூறுகின்றார். கழிய வென்பது கழிந்தெனத் திரிந்தது. இன்பம் எனப் பொதுப்பட மொழியினும் சிறப்புடைய மெய்ம்மையுற்ற சிவானந்தம் கொள்ளப்பட்டது. சிவப்பேரின்பம் கொள்ளப்படுகிற தென்பதால், அவமே கழிவது பொய்யான உலகியலின்பமாயிற்று. அருவ நிலையிற் சிவமெனவும் உருவ நிலையிற் சிவன் எனவும் பரம்பொருள் குறிக்கப்படுவதால், “சிவமே” என்கின்றார்.

     (9)