2948.

     தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்
     சிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா.

உரை:

     தனக்குத் தானே மேலாகிய அம்பலத்தில் தனிக் கூத்தியற்றும் பெருமானே, மேலான சிவஞானமே, உன் திருமேனி நோதல் இல்லையோ. எ.று.

     தற்பரம் - தனக்குத் தானே பரமாவது. பரம் - மேல். மன்று - அம்பலம். பிறரெவரொடும் கூடாது, தன்னிற் கூறாகிய உமைநங்கையும் வேறாய் நின்று காண ஆடுதலின் சிவனது திருக்கூத்து, “தனி நடனம்” எனப்படுகிறது. சிற்பரம் - ஞானப் பரம்பொருள்; பரஞானத்தாற் காணத்தக்க கரம்பொருள் என்றுமாம்.

     (10)