30. பேரன்புக் கண்ணி
அஃதாவது உள்ளத்தில் மிக்கிருக்கும் ஆசைகளை எடுத்துரைப்பது. இதன்கண் சிற்றம்பலம், திருநடனம், திருவடி, சிவம், அதன் திருவருள் ஆகியவற்றின் மேற் பொங்கி நிற்கும் மிக்க ஆசையை வடலூர் வள்ளல் எடுத்துரைக்கின்றார்.
தாழிசை 2950. கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்
அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே.
உரை: ஐயனே, நான் கற்ற கல்வி எக்காலத்தும் சாவாத கல்வி யாம் என்று கண்டு தெளிந்து நின்னுடைய அற்புதமான சிற்றம்பலத்தில் அன்பு கொண்டேன், காண். எ.று.
கற்றுப் பெற்ற கல்வி உயிரின்கட் கிடந்து “அது புகுமிடந் தோறு” புகுந்து தன் பயனை நல்கியவண்ணம் இருத்தலால், “என்றும் சாகாத கல்வியென்று கண்டு கொண்டு” எனவும், கல்விப் பயன் இறைவன் நற்றாளை மறவாமையாதலால், நற்றாள் நின்று நடனமிடும் சிற்றம்பலத்தின் மேல் அன்பு கொள்வேனாயினேன் என்பாராய், “உன் அற்புதச் சிற்றம்பலத்தில் அன்பு வைத்தேன்” எனவும் இயம்புகின்றார்; “ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து” (குறள்) எனத் திருவள்ளுவர் கூறுவர்: இதனால், கல்வி சாகா நிலையது என்பது பெறப்படுதல் காண்க. உடம்பிற்கே யன்றி உயிர்க்குச் சாவில்லை என மெய்ந்நூல்கள் கூறுவது பற்றி, அதனோடு ஒட்டி நின்று ஒழியாது தொடர்தலின் கல்வியும் சாகாக் கல்வியாயிற் றென வுணர்க. (1)
|