2952.

     நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில்
     ஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே.

உரை:

     உடம்பு போல் அறிவடையாத நன்மையைப் பெறற்கு எண்ணியே நான், அம்பலத்தில் நிகழும் ஆனந்த நடனத்தின்கண் அன்பு கொள்வேனாயினேன். எ.று.

     அந்தம் - முடிவு; ஈண்டு உடம்பு எய்தும் முடிவின் மேல் நின்றது. தோற்றமும் மறைவும் உடையது உடம்பு; உயிராகிய எனக்கு அஃது இல்லை. உடம்பொடு கூடித் தோற்றக் கேடு எய்தும் நிலைமையின்றி, என்றும் பிறப்பிறப் பில்லாத நிலை ஈண்டு “அந்தமில்லா நலம்” எனப்படுகிறது. நாடகம், நடனம், தோற்றக் கேடுகளின்றி என்றும் நடைபெறுவதாகலின், நான் அதன்மேல் அன்பு கொண்டேன் என்பாராய், “ஆனந்த நாடகத்துக் கன்பு வைத்தேன்” என இசைக்கின்றார். ஆனந்த நாடகம் - இன்பமே நல்கும் திருக்கூத்து.

     (3)