2957. பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிமே லன்றியயல்
ஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே.
உரை: ஐயனே, என்பால் அன்புடைய ஐயனே, வழிபாடு செய்து உறுபொருளாகப் பெறப்பட்ட உனது அழகிய திருவடியல்லது வேறு எப்பொருள் மேலும் எனக்கு ஆசையே கிடையாது, காண்க. எ.று.
நறுமலர் கொண்டு வழிபடப் படுவது சிவன் திருவடியாகும்; அதனை நினைவிற்கொண்டு நினைந்தவண்ணம் இருப்பது விளங்க, “பூசை செய்து பெற்ற வுன்றன் பொன்னடி” எனப் புகல்கின்றார். அதுவே ஆசை யறுத்து அயரா இன்பத்தை யளித்தலால், “அயல் - ஆசையொன்றும் எனக்கு இல்லை” என இசைக்கின்றார். அயல், திருவடிக்கு அயலான பொருள்கள். (8)
|