2958.

     இச்சைநின்மே லன்றியெனக் கெள்ளளவும் வேறுமொன்றில்
     இச்சையிலை நின்னாணை யென்னருமை ஐயாவே.

உரை:

     என் அருமையான ஐயனே, என் விருப்பமெல்லாம் நின்பாலன்றி வேறு எதன் மேலும் எள்ளளவும் இல்லை; இதனை நின்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன். எ.று.

     இச்சை - விருப்பம்; ஆசையுமாம். உலகில் வாழ்வார்க்கு ஆசைகள் பலவுண்டு; எனினும் எனக்குச் சிவபிரானாகிய உன்மேல்தான் என்பார், “இச்சை நின்மேலன்றி” என்றும், பிற எப்பொருள் மேலும் இல்லை யென்றற்கு “வேறும் ஒன்றில் எள்ளளவும் இச்சையிலை” என்றும் கூறுகின்றார். இதனை மேலும் வற்புறுத்தற்கு “நின் ஆணை” யென வுரைக்கின்றார். கூறிய தொன்றை வற்புறுத்தற்கு உயர் பொருளாகிய தாய், தந்தையர், மக்கள், குரு, தெய்வம் முதலாயினார் மேல் தாய் ஆணை, தந்தையாணை என்பன முதலாகக் கூறுவது உலகியல்பாதலால் “நின் ஆணை” என்று இயம்புகின்றார்.

     (9)