2960.

     எவ்வண்ணம் நின்கருத்திங் கென்னளவி லெண்ணியதோ
     அவ்வண்ணஞ் செய்கவெனக் கன்புடைய ஐயாவே.

உரை:

     எனக்கு அன்புடைய ஐயனே, என்பால் நின் கருத்து யாது நினைக்கிறதோ அதனையே கருதியவாறு செய்தருள்க. எ.று.

     கருதுவோர் கருத்தறிந்து முடிக்கும் முதல்வனாதலால், நின் கருத்திங்கென்னளவில் எண்ணியதோ அவ்வண்ணம் செய்க” என வுரைக்கின்றார். “மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னை” (ஆலவாய்) எனப் பெரியோர் கூறுவது காண்க.

     (11)