2961. தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
உரை: எனக்கு அன்புடைய ஐயனே, ஒளி திகழும் நின்னுடைய தண்ணிய திருவருளாகிய தெளிவுடைய அமுதத்தைப் பருகுதற்கு என் உள்ளத்தில் ஆசை பெருகுகிறது, காண். எ.று.
இறைவன் திருவருள் ஒளி யுருவாகிய சத்தியாதலால், “தேசுறும் தண்ணருள்” எனச் சிறப்பிக்கின்றார். தேசு - ஒளி. அருளொளி வெம்மையின்றித் தண்ணியதாதல் பற்றி, “தண்ணருள்” எனப்படுகிறது. அருட்கு அமுதத்தை ஒப்புக் கூறுவது கொண்டு, பருகுதற் பொருளில் “கொள்ள” என்கின்றார். பொங்குதல் - மிகுதல். திருவருள் ஞான மயமாதலால் சிவஞானியாகிய வடலூர் வள்ளற்கு ஆசை பெரிதாயிற் றென அறிக. (12)
|