2962.

     மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே
     ஆசைபொங்கு கின்றதெனக் கன்படைய ஐயாவே.

உரை:

     அன்புடைய ஐயனே, மாசற்ற பொன் போன்ற நினது திருவருளாகிய பெரிய மணியை முடிமேற் கொண்டு கூத்தாடுதற்கு எனக்குள் ஆசை மிகுகின்றது, காண். எ.று.

     மாசு - குற்றம்; பொன்னுக்கு மாற்று ஓடுதல் குற்றம் என்பர்; அதனால் “மாசறு பொன்” என்று சிறப்பிக்கின்றார். மாசற்ற பொன் கண்ணுக்கு இனிதாம் என்பர், அடியார்க்கு நல்லார், திருவருளின் அருமையும் பெருமையும் புலப்பட, “பொன்னருள்” என்று புகல்கின்றார். மணியை முடி மேற் கொண்டு களித்தாடல் தோன்றல், “மாமணி பெற்று ஆட” என்கின்றார்.

     (13)