கண

கண்ணிகள் (சரணம்)

2966.

     காம மகற்றிய தூய னடி - சிவ
          காம சவுந்தரி நேய னடி
     மாமறை யோதுசெவ் வாய னடி - மணி
          மன்றெனு ஞானவா காய னடி. கொம்மி

உரை:

     காமம் அகற்றிய தூயன் - காம இச்சைக் கிடமாகாத தூயவன். தில்லையில் உமாதேவிக்குச் சிவகாமசுந்தரி என்பது பெயராகலின், “சிவகாம சவுந்தரி” என்றும், அவளுடைய அன்பனாதலால் “நேயன்” என்றும் கூறுகிறாள். நேயம் அன்பு. சுந்தரம் சௌந்தரம் என வருமாதலின், “சவுந்தரி” என்று பாடுகிறார்கள். மறை - வேதம். “சந்தோக சாமம் ஓதும் வாயான்” (வீழி) எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. மணி மன்று - அழகிய சபை. ஞானவாகாயன் - ஞான ஆகாசத்தை யுடையன். தில்லையம்பலத்தைச் சித் அம்பரம் எனவும். சிதாகாசம் எனவும் கூறுவது பற்றி, “மன்றெனும் ஞான வாகாயனடி” என்று பாடுகிறார்கள்.

     (1)