2968.

     கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி
          கங்கைக் கருளிய கர்த்த னடி
     தில்லைச்சி தம்பர சித்த னடி - தேவ
          சிங்கம டியுயர் தங்க மடி கொம்மி

உரை:

     கல்லைக் கனிவிக்கும் சுத்தன் - கல்லையும் கனிந்த பழம் போல மெலிவிக்கும் தூயவன். “கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத் தழுத்தி வினை கடிந்த வேதியன்” (அம்மானை) என்பது திருவாசகம். சிதம்பர சித்தன் - சிதம்பரத்தைச் சித்திப்பவர் சித்தத்தில் இருப்பவன்.

     (3)