2982.

     வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு
          மாசுபறித் தளர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்
     தாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்
          தானாகி நானாகித் தனியேநின் றவருக்கு ( தெண்ட )

உரை:

     வாழ்ந்தார், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய திருவருட் செல்வர்கள், மாசுபறித்தவர் - குற்றம் நீங்கிய திருத்தொண்டர். காசு பறித்தல் - சுந்தரர் சேரமன்னரிடம் பெற்ற காசுகளை வழிப்பறி செய்தது. தாழ்ந்தார் - தாழ்ந்தாரைத் தாழக் காண்டல். அன்பால் தாழ்ந்த மனமுடைய கலிக்கம்பர் போல்பவர், அடிமையாய் இருந்து போலித் தொண்டராய்ப் போதரக் கண்டு தாழ்ந்து வணங்கச் செய்தல். தானாதல் - உயிர்த் துணையாய் உடனாதல். நானாதல் - உயிர்க் குயிராய் ஒன்றாதல். தனியே நிற்றல் - உயிரின் வேறாய சிவமாய் நிற்றல். “பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” (கழுமல) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க.

     (4)