2983. ஆதியத்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு
அண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருத்குச்
சோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்
தொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு ( தெண்ட )
உரை: ஆனந்த நாடர் - இன்ப மயமான பரசிவ நாடு. ஏனை நாடுகளைப் போலத் தோற்றமும் முடிவு மில்லாத நாடாகலின் “ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடு” என்று கூறுகின்றார். அண்டர் - தேவர்கள். மணிகண்டர் - நீலமணி போன்ற கழுத்தை யுடையவர். சசிகண்டர் - பிறைத் துண்டத்தை முடிச்சடையில் உடையவர். சோதி மயமாய் விளங்குவதை “பரஞ்சுடர்ச் சோதியுட் சோதியாய் நின்ற சோதி” (சித்தக்) என நாவுக்கரசர் உரைப்பது காண்க. வடிவாளர் - வடிவுடையவர். துசம் - கொடி. தொண்டர் குடி கெடுத்தல் - தொண்டர்களை மீள மண்ணிற் பிறந்து குடியாகாதவாறு செய்தல். (5)
|