2985.

     தாய்வயிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்
          சாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு
     ஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு
          ஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு
     தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சுவாமிக்குநான்
          தெண்டனிட்டே னென்று சொல்ல டி.

உரை:

     உலகுயிர்கட்குத் தான் தாயாவ தல்லது தனக்குத் தாய் இல்லாதவனாதலின், சிவனை, “தாய் வயிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்” என வுரைக்கின்றாள். சாதி - குலம் முதலியன மக்கள் வகுத்த பிரிவுகளாதலால், மக்களைத் தோற்றுவித்த அவனுக்கில்லை என்றற்கு “சாதி குல மறியாது தாண்டவம் செய்கின்றவர்” என இயம்புகிறாள். தாண்டவம் - கூத்து. ஏய தொழில் - அவரவர்க் கேற்ற தொழில். பிராண நாயகன் - உயிர்த் தலைவன். ஏமாந்தவர் - ஏமமாகிய தவத்தை யுடையவர். ஏமம் - ஏம் என ஈறு குறைந்தது. ஏமாத்தும் ஈசன் - ஏம் ஆர்த்தும் ஈசன் என வரும்; முத்திச் செல்வம் அருளும் ஈசன் என்பது பொருள்.

     (7)