35. வினாவிடை

    அஃதாவது, நங்கையும் தோழியும் ஒருபால் நங்கையும் நற்றாயும் ஒரு பாலாகி நடராசர் திருமேனி பொருளாக உரையாடுவது.

கொச்சகக் கலிப்பா

2993.

     ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
     ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
     மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
     நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே

உரை:

     தோழி, ஆகமங்களும் வேதங்களும் அரிய பொருள் என்று ஒரு முகமாக உரைக்கின்ற ஓருருவாகி நிற்கும் இவர் யாவர், சொல்லுக என்று தலைவி கேட்க - வானத்துக் கங்கை யாற்றை முடியிலுள்ள சடையில் கொண்டு மணிகள் இழைத்த சபையின்கண் எப்போதும் பாம்பின் மணிகள் ஒளி செய்யத் திருக்கூத்தாடுபவர், காண் எனத் தோழி கூறுகின்றாள். எ.று.

     ஆகமம் - சிவாகமங்கள். ஆரணம் - வேதம். வேதங்கள் பொதுவெனவும் ஆகமங்கள் சிறப்பெனவும் கருதப்படுவன; “வேதம் பசு அதன் பால் மெய்யாகமம்” எனப் பெரியோர் கூறுபவர். வேதம் பல தெய்வங்களையும் வேதாந்தம் பரம்பொரு ளொன்றையும் குறிக்கும். ஆகமம் சிவமொன்றே பரம்பொருள் எனச் சித்தாந்தம் செய்யும். இவற்றால் துணியப்படுவது ஓருருவாகிய சிவபரம் பொருளாதலால், “ஆகமும் ஆரணமும் அரும்பொருள் என்றொருங் குரைத்த ஏக வுரு” எனத் தலைவி தோழிக் குரைத்து, இவரது பெயர் எனக் கேட்கலுற்று, “இவர் ஆர், சொல், தோழி” என வினாவுகின்றாள். ஏகம் - ஒன்று. மாக நதி - ஆகாயக் கங்கை. முடியில் தங்குகிற தெனினும் முடிக்கு அணி செய்தல் தோன்ற “அணிந்து” எனத் தோழி கூறுகிறாள். அனவரதம், “எப்போதும் அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி” (சரசு அந்) எனக் கம்பர் உரைப்பது காண்க. நாகமணி - நாகப் பாம்பின் தலையில் இருக்கும் மாணிக்க மணி. நவிலுதல் - ஈண்டு ஆடுதற் பொருளில் வந்தது. இது தோழியொடு உரையாடல்.

     இதனால் கங்கை தங்கிய சடை முடியுடன் திருவுருக் கொண்டு மணிமன்றில் கூத்தாடும் சிவ பெருமான் சித்தாந்த வேதாந்தங்கள் தெரிவிக்கும் பரம்பொருள் என்பதாம்.

     (1)