த
தாழிசை
2994. அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
கனுபவ மாகின்ற தென்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பம்என் றறியோ மகளே
உரை: தாயே, திருவருள் உருவாகிய இறைவன் தனது அருளால் அருள் ஞானம் வழங்குகிறபோது அவ்விடத்து அப்போது சிவானுபவம்உண்டாம் என்பது என்னையோ என்று தலைவி கேட்கின்றாள்; மகளே, பசுபாச ஞானமாகிய மருட்சி யுணர்வுக்குப் புலப்படாமல், திருவருள் நல்கும் சிவஞானக் காட்சியாற் காணப்படும் திருக்கூத்து, இன்பம் அவ்வனுபவம் என்பது அறிவாயாக எனத் தாய் உரைக்கின்றாள். எ.று.
கூத்தப்பிரான் திருவுரு அருளுரு என்றற்கு “அருளிறை” எனவும், அவ்வுருக்கொள்வது உயிர்கட்கு அருளறிவு நல்குதற் பொருட்டே என்பாளாய் “அருளாலே அருள்கின்ற பொழுது” எனவும், அந்த அருள் நிலையில் ஆன்மாக்கள் பெறுவது அருளனுபவம் என்பாளாய், “அங்கு அனுபவமாகின்றது” எனவும் நங்கை கூறுகின்றாள். அந்த அனுபூதி எத்தகையது என வினவுவாள், “என்னடி தாயே” என்று உரைக்கின்றாள். மருளாலே தெரியாது தெருளாலே தெரியும் என இயைத்துக் கொள்க. பசுபாச அறிவுகள் மயக்க முடையனவாதலால், “மருள்” எனவும், தெளிவுருவாவது பதிஞானமாகிய சிவஞானம்என்றற்குத் “தெருள்” எனவும் செப்புகின்றாள். இதனைப் பரஞான மென்றும் மருளறிவை அபர ஞான மென்றும் கூறுவர். “பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க, வருஞானம் அஞ்ஞான விகற்பம்” (சிவ. சித்தி) என அருணந்தி சிவனார் உரைப்பதறிக.
இதனால், திருவருள் ஞானத்தால் சிவத்தின் திருக்கூத்திற் பெறப்படும் இன்பமே திருவருள் ஞான அனுபவம் என்பதாயிற்று. (2)
|