2995.

     அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
          கனுபவ மாகின்ற தென்னடி தாயே
     செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
          திருவருள் உருவம்என் றறியாயோ மகளே.

உரை:

     தாயே, அறிபொருளை அறிவு கொண்டு அறிகிறபோது அங்கே பெறலாகும் அனுபவம் யாது? என நங்கை கேட்க, மகளே, திருவருளுருவமாகிய சிவமூர்த்தம் ஒடுங்காது காண்பவர்க்குத் தெரியப்படாமல், ஒன்றி யொடுங்கிக் காண்பவர்க்குத் தெரியப்படும் என்பதை நீ அறிய வில்லையோ என விளம்புகிறாள். எ.று.

     அறிவு - பொறி புலன்களாலும் மனத்தாலும் பெறப்படுவது. பொறி புலனுணர்வுகளை காண வறிவு என்றும், மனவுணர்வை நூலறிவு என்றும் கூறுவர். இவற்றையே பாச ஞானமெனவும் பசு ஞான மெனவும் உரைப்பர். அளவை நூல் கூறும் காட்சி, நூல், கருத்து என்ற மூன்றனுள் கருத்தறிவு பசு ஞானமாகவும், காண்டலும் நூலுரையும் பாச ஞானமாகவும் குறிப்பர். அறிபொருளை இவ்விரு வகை அறிவுகளால் அறிகிற போது உண்டாகும் அறிவனுபவத்தை, “அறிவாலே அறிவினை யறிகின்ற பொழுது அங்கு அனுபவமாகின்றது” என்றும் வினாவுகின்றாள். சுகத்துக்க மோகவுருவான முக்குண வயத்தால் அறியப்படும் பொருளின்கண் அமுந்தி யறியாது பிரிந்து நின்று மயங்குவ துண்மையின், “பிறிவாலே தெரியாது” எனவும், ஓரொருகால் சத்துவ குண மேம்பாட்டின்கண் அறியப்படும் பொருளினை ஒன்றி யழுந்தி யறிவது உண்மையின், “செறிவாலே தெரியும்” எனவும் தாய் இயம்புகிறாள். இந்த அறிவால் தெரிய விளங்குவது கூத்தப் பிரானது மூர்த்தமாகிய திருவருளுருவம் என்பாளாய் “திருவருளுருவம் என்று அறியாயோ மகளே” என்று உரைக்கின்றாள். திருவருளுருவம் - அருட் சத்தி தர அதனைச் சிவம் மேவி நிற்கும் உருவம். இதனை, உமாபதி சிவனார், “நீடு பராசத்தி நிகழ் இச்சா ஞானம் நிறை கிரியை தர அதனை நிமலன்மேவி நாடரிய கருணை திருவுருவமாகி” (சிவப்) என்பது காண்க. இவ்வுரையாடலின் உட்கருத்து, “அருளாலே பரரென்றான் தோழி - அத்தை, அறியாமல் யானென்றன் அறிவாலே கண்டேன், இருளான பொருள் கண்டதல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னடி தோழி” எனத் தாயுமானார் உரைப்பது காண்க.

     இதனால், சிவனுண்மைத் தரிசனம் பெறுதற்குத் திருவருள் ஞானமே வேண்டுவதென விளக்கியவாறாம்.

     (3)