2998.

     உலகெலாந் தழைப்பப் பொதுவினில் ஓங்கும்
          ஒருதனித் தெய்வம்என் கின்றாள்
     இலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள்
          என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்
     அலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள்
          அன்பர்கட் கன்பன்என் கின்றாள்
     திலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித்
          தியக்கமுற் றழுங்குகின் றாளே.

உரை:

     திலக மணிந்து ஒளி திகழும் நெற்றியையுடைய என் மகள், தன்னுடைய தெய்வம் உலக முற்றும் வளமிக்குத் தழைத்தோங்கும் வண்ணம் அம்பலத்தில் உயர்ந்திருக்கும் ஒப்பற்றதொரு தெய்வம் என்றும், விளங்குகின்ற பேரின்பக் கடலென்றும், என்னுடைய உயிரின் கண் தங்கும் இறைவன் என்றும், அளவில்லாத கருணையுருவாய அமுதமாவான் என்றும், அன்பருக் கன்பன் என்றும் மொழிந்து இவ்வாறே நாளும் புலம்பி அறிவு மழுங்கி வருந்துகின்றாள்; இதற்கு நான் என்ன செய்வேன். எ.று.

     உலகுயிர்கட்கு நலம் பெருகுதல் வேண்டிச் சிவபிரான் தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடுகின்றான் என்பது பற்றி, “உலகெலாம்தழைப்பப் பொதுவினி லோங்கும் ஒரு தனித் தெய்வம் என்கின்றாள்”. “ஞாலத்து அரந்தை கெட மணி மன்றுள் ஆடல் நிகழ்கிற” தென உமாபதி சிவம் கூறுவதறிக. பொது, அம்பலம். ஒன்றாய் ஒப்பற்றது சிவம் என்றற்கு “ஒரு தனித் தெய்வம்” என உரைக்கின்றாள். வாரி, கடல். உயிர்க்குயிராய் ஒன்றுவது கொண்டு சிவனை “என்னுயிர்க் கிறைவன் என்கின்றாள்”. இறைவன் - தங்குபவன். அருளுருவினனாதலால், “கருணை யமுதன்” என்றும், அன்பர்கட்கு வேண்டுவன நல்கி அன்பு செய்வது விளங்க “அன்பர்கட் கன்பன்” என்றும் இயம்புகின்றாள். தியக்கம் - அறிவு மழுங்குதல். அழுங்குதல் - வருந்துதல்; செயல்படாமையுமாம்.

     (3)