2999. திருஎலாம் அளிக்கும் தெய்வம்என் கின்றாள்
திருச்சிற்றம் பலவன்என் கின்றாள்
உருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள்
உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்
கருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி
காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்
மருஎலாம் மயங்கும் மலர்க்குழல் முடியாள்
வருந்துகின் றாள்என்றன் மகளே.
உரை: என்னுடைய மகள், நறுமணம் கமழும் பூக்களணிந்த கூந்தலை யவிழ விட்டு வருத்தமுடன் வாய் வெருவலுற்று, என் தெய்வம், செல்வ வகை யாவையும் அளித்தருளும்; திருச்சிற்றம்பலத்தை யுடையவன்; உருவவகை பலவும் உடைய ஒருவன் எனவும், தன் தலைமேற் கைகுவித்துத் தொழுது பிறப்பு வகை பலவும் நீங்கி அப்பெருமானது திருமேனியைக் காண்பது எக்காலம் எனவும் உரைக்கின்றாள் இவட்கு என்ன செய்வேன். எ.று.
மரு - நறுமணம். மலர்வகை பலவும் வேறு வேறு மணம் உடையவையாதலின் “மருவெலாம்” எனக் கூறுகின்றாள். கூந்தலை முடியிடாமல் அவிழ்ந்து அலைய விடுதல் சிறப்பன்மையால், “மலர்க்குழல் முடியாள்” என்றும், வருந்துதற் கேதுவாகும் குறை யாதும் இல்லையாகவும் “வருந்துகின்றாள்” என்றும் தாய் உரைக்கின்றாள். திரு - செல்வம், திருவெலாம் அளிக்கும் தெய்வம் இன்ன தென விளக்குதற்குத் “திருச்சிற்றம்பலவன் என்கின்றாள்”. அருவம் நான்கும் உருவம் நான்கும் அருவுருவ மொன்றுமாக ஒன்பது கூறுபவாகலின், “உருவெலாம் கடந்த ஒருவன்” என்கின்றாள்; மங்கல மகளிர் தலைமேற் கைகூப்பித் தொழுதல் நன்றன்றாகவும், “உச்சி மேற் கரங் குவிக்கின்றாள்” எனத் தாய் வருந்துகிறாள். பிறவிக்குக் காரணமாகிய குற்ற மெல்லாம் நீங்கினாலன்றிச் சிவத்தின் திருமேனி காண்டற் கரிதாதல் பற்றிக் “கருவெலாம் கடந்து ஆங்கு அவன் திருமேனி காண்பது எந்நாள் கொல் என்கின்றாள்” என்று சொல்லுகிறாள். இவளுடைய வேறுபாடு நீங்குதற்குரிய செயல் யாதெனத் தெரியவில்லை என்பது குறிப்பு. (4)
|