3000. மின்இணைச் சடில விடங்கன்என் கின்றாள்
விடைக்கொடி விமலன்என் கின்றான்
பொன்இணை மலர்த்தாள் புனிதன்என் கின்றாள்
பொதுவிலே நடிப்பன்என் கின்றாள்
என்இணை விழிகள் அவன்திரு அழகை
என்றுகொள் காண்பதென் கின்றாள்
துன்இணை முலைகள விம்முற இடைபோல்
துவள்கின்றாள் பசியபொற் றொடியே.
உரை: பசுமையான பொன்னிறப் பூங்கொடி போன்ற என் மகள் தன்னுடைய நெருங்கிய இரண்டாகிய கொங்கைகள் பருத்துவிம்முதலால் நொசியும் இடை போல் நுடங்குகின்றவள் வாய் வெருவலுற்று மின்போல் ஒளிரும் சடையையுடைய அழகன் எனவும், எருதெழுதிய கொடியையுயர்த்த விமலன் எனவும், அழகிய மலர் போன்ற திருவடிகளை யுடைய புனிதன் எனவும், சபையிலே கூத்தாடுபவ னெனவும், என்னுடைய இரண்டாகிய கண்கள் அவனது திருவிளங்கும் அழகை எப்பொழுது காணுமோ எனவும் மொழிகின்றாள்; இவட்கு நான் செய்வது? யாது என நற்றாய் வருந்துகிறாள். எ.று.
துன்னுதல் - நெருங்குதல். கொங்கைகள் இடையில் ஈர்க்கும் போகாதவாறு நெருங்குதல் சிறப்பெனக் கருதுவர் சான்றோர். “இடையீர் போகா இளமுலையாளை யோர்புடையீரே” (ஒத்தூர்) எனத் திருஞானசம்பந்தர் உரைப்பதறிக. விம்முதல் - பெருத்தல். கொங்கைகளின் சுமைக் காற்றாது நுணுகுமிடை நொசிவது பற்றி, “இடைபோல் துவள்கின்றாள்” என நற்றாய் வருந்திக் கூறுகின்றாள். மின்னிணைச் சடிலம் - மின்னற் கொடி போலும் நிறமும் ஒளியும் பொருந்திய சடை. “மின்னியல் செஞ்சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு பொன்னியல் கொன்றையினான்” (பாதாளீச்) என ஞானசம்பந்தர் எடுத்துப் பாடுவது காண்க. சடிலம் - சடை. விடைக் கொடி - எருதின் உருவெழுதிய கொடி. விமலன் - மலமில்லாதவன். பொன்னிணை மலர்த்தாள் - பொன்னின் நிறமும் அழகும் கொண்ட தாமரை போன்ற திருவடி. புனிதன் தூயவன். பொது, தில்லையம்பலம்; இன்றும் பொது என்னும் பெயர் வழக்கிலுள்ளது. நடித்தல் - கூத்தாடுதல். திரு வென்பதே அழகைக் குறிக்குமாயினும், கண்டார் விரும்பும் சிறப்பு விளங்க, “திருவழகு” எனக் கூறுகின்றாள். காட்சி வேட்கை மிகுவது தோன்ற “என்று கொல் காண்பது” என வாய் வெருவுகிறாள். (5)
|