3001. கருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும்
கருணைஎங் கடவுள்என் கின்றாள்
பெருங்களி துளும்ப வடவனத் தோங்கும்
பித்தரில் பித்தன்என் கின்றாள்
ஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல்
உறுவரோ அவனைஎன் கின்றாள்
தருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும்
தவிர்க்கின்றாள் என்அருந் தவளே.
உரை: தரப்படுகின்ற கள்ளை யுண்டவள் போன்று, நாணத்தை ஒழித்தவளாகிய என்னுடைய அரிய தவமகள், கரிய யானையின் தோலைப் போர்த்துக் கொண்டு அம்பலத்தில் ஆடுகின்ற கருணையுருவாகிய கடவுள் எனவும், பெருமகிழ்ச்சி மிக்குறத் திருவாலங்காட்டில் உயர்ந்தோங்கும் பித்தர்களிற் பெரும் பித்தனாவான் எனவும், வண்டினம் திரண்டு மொய்த்து ஒலிக்கும் கூந்தலையுடைய மகளிருள் அப்பெருமானை என்னைப் போல் எய்துபவ ருண்டோ எனவுமுரைக்கின்றாள். எ.று.
களிப்புடைய கள், களி எனப்படுகிறது. களிப்பு மிகுமளவும் வைத்திருந்து தரப்படும் கள்ளைத் தருங்களி எனக் கூறுகிறாள். கள்ளுண்டவரைப் போல் மெய்யில் அசைவும், சொல்லிற் சோர்வும் கொண்டுள்ளாள் என்றற்குத் “தரும் களி யுண்டாள் போல்கின்றாள்” என்றும், பெண்மைக் குயிரினும் சிறந்த நாணத்தையும் கைவிடுகின்றாள் என்பாளாய், “நாணும் தவிர்க்கின்றாள்” என்றும், தவம் புரியும் பெண் போல் கோலமும் ஒழுக்கமும் கொண்டிருப்பது விளங்க “அருந்தவள்” என்றும் உரைக்கின்றாள். பொன் போன்ற மேனிக்குக் கரிய யானைத் தோற் போர்வை அழகு செய்தலின், “கருங்களிற்றுரி போர்த்து அம்பலத்தாடும் கடவுள்” எனவும், கடவுளாயினும் கருணையே யுருவாயவன் என்பாள், “கருணையங் கடவுள்” எனவும் இயம்புகிறாள். பெருங்களி, பெருமகிழ்ச்சி. வடவனம் - ஆலங்காடு. திருவாலங்காடு சிவன் கோயில் கொண்டுள்ள திருப்பதிகளில் ஒன்று. இது பழையனூர் ஆலங்காடு என்றும் சிறப்பிக்கப்படும். “புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போல் அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே” (ஆலங்) என ஞானசம்பந்தர் பாடியருளுவது காண்க. காரைக்காலம்மையார், “எடுத்த பாதம் அண்டமுற அண்டமுற நிமிர்ந்தாடும் எங்கள் அப்பனிடம் திருவாலங்காடே” (மூத்த) என்று சிறப்பிக்கின்றார். பெரும் பித்தன் என்றற்குப் “பித்தரிற் பித்தன்” என்கின்றாள். “பெண்பாலுகந்தான் பெரும்பித்தன் காணேடி” (சாழல்) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. அளி - வண்டு, ஒருங்கு மிழற்றுதல், திரண்டு மொய்த்து ஒலித்தல். “ஒருங்களி யார்ப்ப உமிழ் மும்மத்தது யானை” (திருக்கோவை. 52) என வருதல் காண்க - குழலினார். கூந்தலையுடைய மகளிர். என் போல் அவனை யுறுவரோ என்பதற்கு, என்னைப் போல் அவன்பாற் காதலன்புறுவரோ எனினும் அமையும். பெண்மை நலங்களே யன்றி உயிரிற் சிறந்த நாணையும் தவிர்ந்தா ளென நிற்றலின், உம்மை எச்சப் பொருள தென அறிக. (6)
|