3002.

     மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால்
          மதிப்பனோ பிறரைஎன் கின்றாள்
     வன்துயர் நீக்கும் அவன்திரு வடிவை
          மறப்பனோ கணமும்என் கின்றாள்
     ஒன்றுமில் லவன்என் றுரைக்கினும் எல்லாம்
          உடையவன் ஆகும்என் கின்றாள்
     பொன்றுதல் பிறழ்தல் இனியுறேன் என்றே
          பொற்றொடி பொங்குகின் றாளே.

உரை:

     தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் என் மணவாளனையன்றிப் பிறர் எவரையும் மனத்தில் நினையேன் என்றும், கொடிய துன்பங்களைப் போக்கும் அப்பெருமானுடைய திருவடியைக் கணப்பொழுதும் மறவேன் என்றும், ஒரு சிறு பொருளும் தனக்கென வுடையனல்லன் எனப் பிறர் உரைத்தாலும், அவன் உலகமெல்லாம் உடையவனாவா னென்றும், யான் இனிப் பிறப்பும் இறப்பும் அடையேன் என்றும் பொன்வளை யணிந்த என் மகள் மகிழ்ச்சி மிகுந்து உரைக்கின்றாள். எ.று.

     மன்று - தில்லைத் திருச்சிற்றம்பலம். மணாளன் - மணத்தாற் புணரும் கணவன். மதித்தல், நினைத்தல், வன் துயர் - நீக்குதற் கரிய வலி யுடைய துன்பம். உயிர்கள் எய்தும் பிணிகட்கு நன்மருந்தாகலின், “வன்துயர் நீக்கும் திருவடி” என்று புகழ்கின்றாள். கணம் - சிறு கால அளவு. பொன்னும் மணியும் பிறவுமாகிய பொருள் ஒன்றும் தனக்கென இல்லாதவன் என்று சொல்லி இகழ்ந்த லுண்மையின், “ஒன்று மில்லவனென்றுரைக்கினும்” எனக் கூறுகின்றாள். எல்லாம் என்பது “எஞ்சாப் பொருட்டாய் வருவதோர் உரிச்சொல் லென்பாரு முளர்” (சொல். 186) என்பர் சேனாவரையர். பொன்றுதல் - சாதல். பிறழ்தல் என்பது பாடமாயின், மாறிப் பிறவேன் என்று பொருள் செய்க.

     (7)