3003.

     திருத்தகு தில்லைச் திருச்சிற்றம் பலத்தே
          தெய்வம்ஒன் றுண்டெமக் கென்பாள்
     பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார்
          பேசுக பலபல என்பாள்
     மருத்தகு குழலாள் மனமொழி உடலம்
          மற்றவும் அவன்கழற் கென்பாள்
     குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள்
          குதுகுலிப் பாள்பசுங் கொடியே.

உரை:

     என்னுடைய பொன்னிறப் பூங்கொடி போன்ற மகள் எனக்குரிய தெய்வம், திருவீற்றிருக்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தே உளது என்பாள்; அதனை நினையாது பெரிய குங்குமக் குழம்பு பூசிய பொன்னாற் செய்த கலசம் போன்ற கொங்கைகளையுடைய அயற் பெண்டிர், என்னை நோக்கித் தத்தம் மனத்தன பேசுக எனக் கூறுவதோடு, மணந் தங்கும் கூந்தலையுடைய என் மகள் மனம், மொழி, மெய் மூன்றையும், தன் பிற பொருள்களையும் அவன் திருவடிக்கே உரியவை என்கின்றாள். நிறந்தங்கும் குவளை மலர் போன்ற கண்களிலிருந்து கண்ணீர் வடிக்கின்றாள்; அதே நிலையில் தன்னை யறியாதே அகமகிழ்ச்சி யடைகின்றாள். எ.று.

     செல்வ வகை பலவும் நிறைந்துள்ள தில்லை நகரைத் “திருத்தகுதில்லை” எனச் சிறப்பிக்கின்றார். இப் பொருண்மையே கருதி, மதுரை நகர்ச் செல்வ வீதியைத் “திருவீற்றிருக்கும் தீது தீர் நியமம்” (முருகு) என நக்கீரனாரும் நவில்கின்றார். தில்லைப் பெருங் கோயிலில் உள்ளது திருச்சிற்றம்பலமாகலின், “தில்லைச் சிற்றம்பலத்தே எமக்குத் தெய்வம் ஒன்றுண்டு” என்றுரைக்கின்றாள். குங்குமம் ஈண்டுக் குங்குமக் குழம்பின் மேற்று. இதை இளமகளிர் மார்பில் அணிந்து கொள்வது பண்டை நாளைய மரபு. “சேலுங் கயலுந் திளைக்கும் கண்ணார் இவை கொங்கையின் செங்குங்குமம் போலும்” (பல்லாண்டு) எனப் பெரியோர் கூறுவது காண்க. கொங்கை பருத்தவிடத்துப் பொன்னிறமும் ஒளியும் திகழ்தலின், “வாண் முலையார்” என்கின்றார். நங்கையின் மேனி வேறுபாடு கண்டு தத்தம் மனத்தில் எழுகின்ற எண்ணங்களை வாய் காவாது சிலரும் பலருமாய்க் கூடி, அவர் கூறுவதை அறிகின்றாளாதலின், அதனுக் கஞ்சாது, “முலையார் பேசுக பல பல என்பாள்” என்கின்றாள். மருமலர்க் குழலாள்” என்றாது, “மருத்தகு குழாலள் என்றது இயற்கையாகவே மணங் கமழும் கூந்தலை யுடையவள் என்றற்கு, உடம்பின் வேறாய், பெற்றோர் தனக்கென அளித்த அணி வகைகளையும் பிறவற்றையும் குறித்தற்கு, “மற்றவும்” எனச் சுட்டி மொழிகின்றாள். குரு - நிறம். “குருவுங் கெழுவும் நிறனாகுமே” என்பது தொல்காப்பியம். கொழித்தல் - ஈண்டு நிறைந்து சொரிதல். குதுகுலித்தல் - உள்ளத்தே மகிழ்தல். இது குதுகலித்தல், குதூ கலித்தல் எனவும் வழங்கும்.

     (8)