3006.

     நம்பல மாம்என் நன்மனை புக்கர் நடராஜர்
     எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
     வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
     அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.

உரை:

     அம்மா, நாம் செய்யும் பொருட் பயனென்னுமாறு என்னுடைய நல்லமனைக்குப் போந்தருளிய கூத்தப் பெருமானை, நான் வணங்கி, எங்கள் பெருமானே, நீர் எங்கட்கு வன்மையான துணையாயினீர் என்று உரைத்தேனாக, இளமகளே நாம் சொல்வது புதுமையன்று; எம்முடைய வாழ்வெல்லாம் அம்பலமாகும் என மொழிகின்றார்; அவர்சூதை என்னென்பது. எ.று.

     நம்பலம் - நாம் பொருளீட்டி வாழும் வாழ்வின் பயன்; பலம் என்பது இந்நாளிற் பலன் என வழங்குகிறது. வாழ்வார் வாழ்வின் பயன் திருவட்பேறாதல் பற்றி, “நம் பலமாம் என நன்மனை புக்கார் நடராசர்” என நவில்கின்றாள். நன்மனை என்கிறாள், திருவருட் செல்வ வாழ்வு நிகழ்கின்றமை புலப்படுத்தற்கு. எம்பலம் - எமக்கு வலிய துணை; பலமான துணை என்பதாம். வம்பு - புதுமை. எம்முடை வாழ்வு என்பது நங்கையை யுளப்படுத்தி மண்ணுலகில் நம்முடைய யாக்கை, செல்வம் முதலியவற்றால் உளதாகும் வாழ்வு எனக் கொண்டு, நிலையாய பயனில்லாதன என்பது யாவர்க்கும் வெளிப்படையாய்த் தெரிந்தது என்பதற்கு, “அம்பலம்” எனக் கூறுகின்றார் என்பது கருத்து. கூத்தப் பிரானைக் குறிக்கும் போது, அம்பலம், தில்லைத் திருச்சிற்றம்பலமாகும்:

     இதனாலும் மண்ணக வாழ்வின் நிலையாமையே வற்புறுத்தியவாறாம்.

     (2)