38. தலைமகளின் முன்ன முடிபு

    அஃதாவது, பெருந்திணை நங்கையின் முடிவான உட்கருத்தையுரைத்தல். இதன்கண் நங்கை தன்னுடைய நினைவு செயல் சொற்களில் உண்டான குற்றங்களை நினைந்து; அவற்றுக்குரிய காரணங்களை எண்ணியுரைத்துப் பொறுத் தருளுமாறு இறைவனை வேண்டுகின்றாள்.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3007.

     வெறுத்துரைத்தேன் பிழைகள்எலாம் பொருத்தருளல் வேண்டும்
          விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
     கருத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
          கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
     மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
          மறுத்திடினும் உன்னைஅலால் மற்றொருசார் பறியேன்
     செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
          சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.

உரை:

     என்பால் விளங்குகின்ற அறிவுக் கறிவாய், மெய் யுணர்வாகிய தில்லையம்பலத்தில் நின்று கூத்தாடும் பெருமானே, வெகுண்டு பல பேசுபவர்க்கும் அருள் செய்து மொழியும் பெரிய கருணை நிறைந்த நெடிய கடலாகியவனே, மூன்று கண் கொண்டு உயர்ந்தோங்கும் கரும்பு போல்பவனே, உன்னை மறுத்துப் பேசுவ தென்னை? நீ திருவருளை நல்கினும் நல்காது மறுப்பினும் உன்னை யொழிய எனக்குச் சார்வாவார் வேறொருவரும் இல்லை; உனக்கு மாறாய் நின்று பேசிய சொற்களை யெல்லாம் திருவருளால் நிகழ்ந்தன என நினைத்துக் கொள்வதன்றிச் செயல் யாதும் வேறில்லேனாதலால், நின்னை வெறுத்துப் பேசிய என் குற்றங்களனைத்தையும் பொருத்தருள வேண்டுகிறேன். எ.று.

     ஒளி யுருவினதாதலால், “அறிவை”, “விளங்கறிவு” என்றும் இறைவன் அதனுட் கலந்து நின்று அறிவருளுகிறான் என்பது பற்றி, “அறிவாகி” என்றும், மெய்யுணர்வின் எல்லைக்கண் நின்று விளங்குதல் புலப்பட, “மெய்ப்பொதுவில் நடிப்போய்” என்றும் நங்கை நவில்கின்றாள். “அறிவினுள் அருளால் மன்னிச் செறி வொழியாது நின்ற சிவன்” (சிவ. சித்தி) என அருணந்தி சிவமும், “அகர வுயிர் போல் அறிவாகியெங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து” (திருவருட்) என உமாபதி சிவனாரும் தெரிவிப்பது காண்க. திருநாவுக்கரசர், “ஆதியும் அறிவுமாகி அறிவினுட் செறிவுமாகி” (ஆப்பாடி) எனக் கூறுவர். மெய்யுணர்வின் எல்லை ஞானாகாயமாதலால், அதுவே சிதாகாசம், சிதம்பரம் என்ற பெயரால் தில்லையம்பலத்துக்காதலால், “மெய்ப் பொதுவில் நடிப்போய்” என வுரைக்கின்றாள். கறுத்தல், வெகுளுதல். தம்மைத் திருமணத்தின் போது தடுத்தாட் கொண்ட காலையில் வேதியனாய் வந்த சிவனை வெகுண்டு பல பேசியது கேட்டும் ஆண்டருளிய திறத்தை நினைவிற்கொணர்தலின், “கறுத்துரைத்தார் தமக்கும் அருள் கனிந் துரைக்கும் பெரிய கருணை நெடுங்கடலே” என வுரைக்கின்றாள். “தன்மையினாலடியேனைத் தாம் ஆட்கொண்ட நாட் சபை முன், வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர் வாழ்வு தந்தார்” (நாவலூர்) என நம்பியாரூரர் எடுத்துரைப்பது காண்க. பெரிய கருணை, பெருமை பொருந்திய கருணை. குறையாமை பற்றி “நெடுங் கடல்” எனச் சிறப்பிக்கின்றாள். கண் பலவுடைய மண்ணுலகக் கரும்பின் வேறுபடுத்தற்கு “முக்கண் ஓங்கு கரும்பே” என்று கூறுகிறாள். அருள் வழங்கப்பெறும் போது மகிழ்ந்துரைத்தலும், இல்லாத போது மறுத்துரைத்தலும் மக்கள் இயல்பாதலால், “மறுத்துரைப்பது எவன்” என்றும், அருள் பெறினும் பெறாவிடினும் முடிவில் அருள் செய்பவன் சிவனேயாதலால், “அருள் நீ வழங்கினும் மறுத்திடினும் உன்னையல்லால் மற்றொரு சார்பு அறியேன்” என்றும் இயம்புகிறாள். அருள் எய்தாக் காலத்து உளதாகும் மனக் கசப்பால் உரைப்பன பலவும் எய்தும் காலத் துண்டாகும் மனத்தெளிவால் அதுவும் திருவருட் குறிப்பே என உணரப்படுதலின், “செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று சிந்திப்ப தல்லாமல் செய்வகை ஒன்றிலனே” எனத் தெரிவித்து, நின்னுடைய இனிய திருவருளைப் பெறாமையால் மனத்தின்கண் வெறுப்புற்று யான் செய்த பிழைகளைப் பொறுத்தருள்க என்று புகல்வாளாய், “வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்” என்று நங்கை முறையிடுகின்றாள்.

     இதனால், திருவருளே என நினையாமல் வெறுத் துரைத்த குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுமென முறையிட்டவாறாம்.

     (1)