3009. முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
என்னவனே என்துணையே என்உறவே என்னை
ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
அன்னவனே அம்பலதுள் ஆடுகின்ற அமுதே
ஆறணித்த கடையாய்யான் வேறுதுணை இலனே.
உரை: என்னைப் போல் சித்துப் பொருளானவனே, எனக்குத் துணையும் நெருங்கிய உறவும் ஆனவனே, என்னை ஈன்ற அன்னை போன்றவனே, எனக்குத் தாயும் குருவும் அரசனுமானவனே, என் வாழ்வின் முதற்பொருளே, என் கண்ணின் மணி போன்றவனே, நீலமணி போன்ற கழுத்தையுடைய மாணிக்கமலை போன்றவனே, தில்லைச் சிற்றம்பலத்துள் ஆடுகின்ற அமுதமே, கங்கை யாற்றை முடியிலே தரித்த சடையையுடைய பெருமானே. எவ்வுயிர்க்கும் முன்னுள்ளவனே, உன்னையன்றி வேறுதுணை எனக்கு இல்லையாகையால், அறிவாற் சிறியவளாகிய நான் செய்வகை யறியாமல் வெறுப்பாற் பேசியிழைத்த பிழைகளையெல்லாம் பொறுத்தருள வேண்டுகிறேன். எ.று.
பொருட் பாகுபாட்டில், உணர்வுடைய பொருள் வகையுள் இறைவனும் அடங்குதலின், “என்னவனே” என்கின்றாள். “சிவன் சீவன் என்றிரண்டும் ஒன்றாம்” (சிவ. சித்தி) என அருணந்தி சிவனார் கூறுவது காண்க; இனி இதற்கு என்னை யடிமையாகவுடையவனே எனினும் பொருந்தும். உயிரோடு ஒன்றியிருந்து நெறி காட்டுதல் பற்றி “என் துணையே” என்றும், உறவாயிருந்து துயர் போக்குதலால், “என் உறவே” என்றும், உடல் கருவிகரணங்களைப் புணர்த்து உலகில் தோற்றுவித்தலால் “என்னையீன்றவனே” என்றும் இயம்புகின்றாள். “நான் ஏதும் அறியாமே என்னுள் நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” (ஆனைக்) எனத் திருநாவுக்கரசர் கூறுவதறிக. அன்பு செய்தலால் தாயே” எனவும், அறிவு நெறி காட்டுதலின் “குருவே” எனவும், “மன்னவனே” எனவும் உரைக்கின்றாள். வாழ்வுக்கு இன்றியமையாத புவன போகங்களை யருளுதலால் வாழ் முதலே” என்றும், காணாதன காணச் செய்தலால், “என் கண் மாமணியே” என்றும் கூறுகின்றாள். “அடியேற்குக் காணா காட்டும் கண்ணாம்” (கருகா) எனப் பெருயோர் விளம்புவர். செம்மேனியும் ஒளியும் உடைமையால் சிவனை “மாணிக்க மலையன்னவனே” எனப் புகழ்கின்றாள். “மாணிக்கத்தின் மலைபோல வருவார்” (கடவூர்) என்று சுந்தரர் குறிப்பது அறிக. பிறவா இறவாப்பேறு நல்குதலால் “அமுதே” என இசைக்கின்றாள். உயிர்க்குயிராய் ஒன்றி நின்று துணை செய்வார் சிவனையன்றி வேறு யாவரும் இல்லாமை தெளிந்து கூறுதலால், “யான் வேறு துணையிலன்” எனவும், எனவே, வருவதறியும் நல்லறிவு சிறிதும் என்பால் இல்லாமையால் வெறுத்துப் பேசிய குற்றத்தைப் பொறுத்தருள்க என்பாள், “சிறியேனான் முனிந்துரைத்த பிழையனைத்தும் பொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்” என உரைக்கின்றாள். முனிவு - வெறுப்பு. பொறுத்தாலன்றி உள்ளத்திற் கனிவு பிறவாமை வாழ்விற் கண்டிருக்கின்றாளாதலால், “பொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்” என்பாளாயினாள். முன்னவன் - முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருள்.
இதனால், சினந்து பேசிய குற்றம் பொறுக்க வேண்டுமென முறையிட்டவாறாம். (3)
|