3011. ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ
உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்
மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே
குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே
நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே.
உரை: ஞான சபைத் தலைவனே, உனக்கும் எனக்கும், இடம் ஒன்றாதலால் இருவரும் பிணங்கி யூடுவதற்கோ கூடிமகிழ்தற்கோ தனியிடம் ஏது? இல்லையன்றோ; பிரிவின்றிக் கூடுதற்குரிய வல்லமை உனக்குண்டு; என்னை நின்பாற் கூட்டிக் கொண்டு, பின்பு என் குணமும் குலமும் நாடி என்னைப்பேச வேண்டா; என்கருத்தனைத்தையும் நீ நன்கறிவாய் வாழ்க்கையில் இடருற்று வருந்தி வாடும்போது, என்னுடைய வலியின்மையாலும் என்மனம் விரும்பாமையாலும், ஓரொருகால் சினம்யறியும் கொண்டு சில சொற்களைப் பேசுவேன்; குண நலங்களை முற்றவும் நாடிதிறம் எனக்குஇல்லை; நாடி யறிதற்கு வேண்டும் நல்லறிவு தந்து நாடியறியுமாறுசெய்து என்னைக் கொண்டருள்க. எ.று.
அன்பர்கள் தம்மிற் பிரிந்து, வேறு வேறிடத்தில் இருப்பின், காண்டற்கின்மையின் ஒருவ ரொருவரின் தவறு நினைந்து பிணங்குதலும் பின்னர்க் கூடும் போது உணர்ந்து மகிழ்தலும் நிகழ்தலால், உன்னிடமும் என்னிடமும் ஓரிடமாதலினால், ஊடுதற்கோர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ” என வுரைக்கின்றாள். ஓரிடமாயின் ஒருவரையொருவர் கண்டு கொண்டே யிருத்தலால், ஊடுதற்கு ஏது தோன்றாமையின், “உன்னிடமும் என்னிடமும் ஓரிடமாதலினால்” என்று கூறுகிறாள். கொண்கண் பழிகாணேன் கண்டவிடத்து” எனவும், “காணுங்காற் காணேன் தவறாய” எனவும் (குறள்) தலைமைப் பண்புடைய நங்கை மொழிவது காண்க. இரு பொருட்கு இடம் ஒன்றாதல் இல்லையாயினும் ஒன்றினுள் ஒன்றாம் போது ஆம் எனும் உண்மை பற்றி, இறைவன் உயிர்க்குள் உயிராதல் கண்டு, “உன்னிடமும் என்னிடமும் ஓரிடமாதலினால்” என வுரைக்கின்றாளென்று அறிக. “உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம், நிரை சேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்” (வீழி) எனத் திருஞானசம்பந்தர் கூறுவ தறிக. உணர்தலும் மறத்தலும், புணர்தலும், பிரிதலும் தளிர்தலும், தளர்தலும் தெளிதலும் மயங்கலும், மகிழ்தலும் வருந்துதலும் வாழ்க்கையுள் “நண்பகல் அமையமும் இரவும் போல, வேறு வேறியலவாகி மாறெதிர்ந்துள” (அகம்.327) வாதலால், “வாடுதற்கு நேர்ந்திடிலோ” என்கின்றாள். பொருளும் செய்கையும் பலவாகிய வுலகில் அவரவர் வன்மை மென்மைக் கேற்பச்சில சிலர்க்குப் பெறப்படுதலும், பெற மாட்டா தொழிதலும், சில சிலர் மனத்துக்குப் பிடித்தலும் பிடிக்கா தொழிதலும் இயல்பாதலால், “மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும்” மனத்திற் சினமெழுந்து வருத்துதலால், “சினந்துரைத்தேன்” எனவும், அப்போது அறிவு அறை போகாமையின் “சிலவே” எனவும் தெரிவிக்கின்றாள். அகப் புறத் தோற்றமும் குணமும் செயலும் வேறுபடுமாற்றால், மக்களினம் தம்மிற் பிரிந்து சிதறிக் கிடப்பது போலாது ஒன்றினும் விடாது கூடி நிற்கும் திறம் எல்லாம் வல்ல இறைவனாகிய உனக்கே யுள்ள வன்மை யென்றற்குக் “கூடுதற்கு வல்லவன் நீ” என்றும், யான் கூடேனாயினும், நீ என்னைக் கூட்டிக் கொள்ளல் வேண்டும்; கொண்ட பின் என் குணம் குலம் முதலியன கண்டு கைவிடலாகாது என்பாளாய், “கூட்டி எனைக் கொண்டே குலம் பேச வேண்டா” என்றும், கைவிடின் தேர்ந்து செய்யும் திறமிலன் என்றும் குற்ற முண்டோ மென்பாளாய், “என் குறிப்பனைத்தும் அறிந்தாய்” என்றும் கூறுகின்றாள். குணம் குற்றங்களை முற்றிலும் நாடி யறிவது சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய மக்களினத்துப் பேதையாகிய எனக்கு இயலா தென்பாளாய், “நாடுதற் கிங் கென்னாலே முடியாது” எனவும், நாடுதற்குரிய முற்றறிவு தந்து என்னை நாடச் செய்க என வேண்டுவாளாய் “நாடுவித்துக் கொண்டருள்வாய்” எனவும் இயம்புகிறாள். “தன்னையும் தன் திறத்தறியாப் பொறியிலேனைத் தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி, அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந் தென்னை யாளாக் கொண்ட தென்னெறும் பியூரான்” (எறும்பி) எனத் திருநாவுக்கரசரும், “அறிவிலாத எனைப் புகுந்தாண்டு கொண்டறிவதை யருளி, மேல் நெறியெலாம் புலமாக்கிய எந்தை” (சதக) என மணிவாசகரும் கூறுவது காண்க.
இதன்கண் சினத்தாற் பிழை செய்தே னாயினும் என்னை ஆட்கொண்டு குலம் பேசவேண்டாமென முறையிட்டவாறாம். (5)
|