3013. எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே
என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே
மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது
மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே
கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது
கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்
குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்
கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே.
உரை: அருளரசே, நான் மனத்திலும் நினைத்ததில்லை; செயல் வகையிலும் கருதுவதின்றி என் போக்கிலே யான் இருந்தேனாக, இவ்வுலகில் என்னை வலிய மணந்து நீ ஆட்கொண்டருளிய அப்பொழுது முதல் என்னுடைய மனம் நின்னின் நீங்கியதில்லை; ஓரொருகால் எனது, வலி யின்மையால், சூழ வுள்ள இனத்தின் நிலைமையால், வேண்டாதன சில சொல்லிய துண்டு; அது தானும் இப்போது என் மனநினைவில் இல்லை; உன்னுடைய திருவுள்ளத்தில் மறவாமல் இருக்குமோ? இருக்குமாயின் குணமே நோக்குவ தன்றிக் குற்றங்களைப் பாரான் நம் பரமன் என்று அறநெறியாளர் சொல்லுகின்ற அச் சொல் இப்போது பொய்யாகுமோ, சொல்லுக. எ.று.
குணத்தாலும் செயலாலும் விரிந்து பரந்த பண்புடையவனல்லனாய் இயல்பாய் அமைந்த போக்கிலே இருந்தேன் எனத் தமது பழமை நிலையைக் கூறுகின்ற வள்ளற் பெருமான், “குணம் குறியேன் இயல் குறியேன் ஏதும் நினையாதே என் பாட்டுக்கிருந்தேன்” என வுரைக்கின்றார். நினைவு செயல்களிற் படிந்திருக்கும் குறுகிய தன்மையையும் அதன் விளைவையும் சிறிதும் எண்ணிற்றிலேன் என்பார், “ஏதும் நினையாதே என்பாட்டுக் கிருந்தேன்” என்கின்றார். பாடு, போக்கு. நீ தானே வலிய வந்து எனக்கு உன்னினைவை யுண்டு பண்ணி உன்பால் அன்பனாய் ஒழுகுமாறு செய்தாய் என்றற்கு, “இங்கு எனை வலிந்து நீயே மணம் குறித்துக் கொண்டாய்” எனவும், அப்பொழுது முதல் நான் சிறு வேறுபாடுமின்றி, உன் வசமேயிருந்து வருகின்றேன் என்பாராய், “அது தொட்டு எனது மனம் வேறுபட்டதில்லை” எனவும், மனத்தில்வலிமையும் அறிவில் திண்மையும் இல்லாமையால், சில காலங்களில் ஒரு சில மாறான சொற்களை நான் சொல்லிக் குற்றப்பட்டதுண்டு என்பாளாய், “மாட்டாமையாலே கணம் குறித்துச் சில புகன்றேன்” எனவும் இசைக்கின்றாள். கணம் - கூட்டம் எனக் கொண்டு இனமாய்க் கூடினோருடைய சூழ்நிலைகாரணமாக, நின் பெருமைக்கு மாறாய சிலவற்றைப் பேசியதுண்டென்றற்கு இவ்வாறு கூறுகின்றாள், எனினு மமையும். இப்போது அவற்றையும் மறந்தொழிந்தேன் என்பாள், “எனது கருத்தில் இலை” என்றும், ஒருகால் உன் மனத்தின்கண் என் சொற்கள் நிலை பெற்றுள்ளனவோ என அஞ்சுகிறேன் என்றற்கு, “உன்னுடைய கருத்திலுண்டோ” என்றும், உளதாயின் மறந்தொழிக; அன்பர் குணம்கொண்டு கோதாட்டுவது நினக்குப் பெரும் பண்பென அறவோர் கூறுகின்றனர்; என் சொற்களை நீ மறவாயெனின், அப் பெருமக்களின் சொல் பொய்யாய் முடியும் என்றும் புகல்வாளாய், “உண்டேல், குணம் குறிப்பான் குற்றமொன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும், அவ்வார்த்தை இன்று மாறிடுமே” எனவுரைக்கின்றாள். “மற்று நான் பெற்றதார் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசிக் குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும் கொள்கையால், மிகை பல செய்தேன்” (வடதிருமுல்லை) என நம்பியாரூரரும், குற்றங்கள் நீக்கிக் குணங் கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான்” (திருவம்) என மணிவாசகரும் கூறுதல் காண்க. மாறுதல் - உண்மைத் தன்மை கெடுதல்.
இதனால், என்னை விரும்பி யாட்கொண்ட பின் குற்றம் கண்டு விலக்குதல் கூடாதென முறையிட்டவாறாம். (7)
|