3014. மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ
மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்வேல்
சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
சினம்பிடியாத் தேவர்திரு உளம்பிடியா தெனவே
சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
இனம் பிடியா மையும் உண்டோ உண்டெனில்அன் புடையார்
ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே.
உரை: மனத்துக்குப் பிடித்த மில்லாமையாலும், வலியின்மையாலும், மறதியினாலும், வருத்தத்தாலும், நாளும் வந்து தாக்கும் மயக்கத்தாலும், திரிபு நோக்காலும், வெகுளியினாலும், வேறு பிறவற்றாலும் சில தவறுகளைப் பேசியுள்ளேனாதலால், சினம் என்பதைச் சிறிதும்கொள்ளாத தேவனாகிய நின்னுடைய திருவுள்ளம் குற்றமாகக் கருதா தென்று மனமகிழ்ச்சியுடனிருக்கின்றேனே யன்றி நின் மனக்கருத்தைச் சிந்திக்கின்றேனில்லை; தன் இனத்தவர்மேல் அன்பில்லாதவர் உலகில் இல்லை; அன்பில்லாமையும் உண்டென்பதாயின், அன்பால் இகழ்வதும் புகழ்ச்சியேயாம் என உலகவர் உரைப்பது என்னையோ? எ.று.
உள்ளத்தே உண்மையன்பு உறைந்திருப்பினும், குண வயப்பட மனம் சில சமயங்களில் பிடித்தமின்றி இயங்குவதாகலின், “மனம் பிடியாமையாலோ” என எடுத்து மொழிகின்றாள். பிடித்தம் - விரும்புதல். வலியின்மையாலும் சில சமயங்களில் வெறுப்புணர்ச்சி தலை தூக்குமாகலின், “மாட்டாமையாலோ” எனவும், நினைப்பும் மறதியும் கடலும் அலையும் போல எழுந்தெழுந் தடங்குவ தியல்பாகலின், “மறதியினாலோ” எனவும் கூறுகிறாள். “உணர்ந்தன மறக்கும் மறந்தன வுணரும்” (அகவல்) என்று பட்டினத்தடிகள் உரைப்பது காண்க. மனத்தின்கண் நோயும் வருத்தமும் தோன்றும்போது விருப்பும் வெறுப்பாய் மாறுதலின், “வருத்தத்தினாலோ” எனக் கூறுகிறாள். “பாலு முண்ணாள்பழங்கண் கொண்டு” (அகம். 48) என வுரைப்பதறிக. தினம் பிடியா மயக்கம்; நாளும் வந்து தாக்கும் மயக்கம். முக்குணங்களும் மாறி மாறி இயல்வனவாதலின், தெளிவும் மயக்கமும் யாவர்க்கும் எந்நாளும் உளவாதல் பற்றித் “தினம் பிடியா மயக்கம்” எனச் சிறப்பிக்கின்றாள். பிடித்தல் - பற்றுதல்; பிடியா - செய்யாவென்னும் வினையெச்சம். முக்குண மயக்கத்தால் தெளிவும் கலக்கமும் உண்டாதலை, உடல் விஞ்ஞானிகள், என்று கூறுகின்றார்கள். வியப்புணர்வு மேலீட்டால் உளதாவது திகைப்பு - பிறர் மேல் உண்டாகும் சினத்தால் அறிவு ஒளி குன்றியொடுங்குதலின், “பிறர் மேற் சினத்தாலோ” எனவும், வேறு காரணம் காண மாட்டாமை பற்றி, “எதனாலோ சில புகன்றேன்” எனவும், இயம்புகிறார். சினம் காமம் மயக்கமாகிய குற்றங்களில்லாதவனாதலால், சிவபிரானைச் “சினம் பிடியாத் தேவர்” என்றும், தாம் செய்த குற்றங்களைப் பொருளாகக் கொள்வதிலர் என்பது பற்றி, “திருவுளம் பிடியாதெனவே சிந்தை களித்திருக்கின்றேன்” என்றும், களிப்பு என் உணர்வை மறைத்தலால், “திருவுளத்தை யறியேன்” என்றும் இசைக்கின்றார். தனக் கன்பராய் இளமாகியவர்களை எக்காலத்தும் எவ்விடத்தும் விலக்குதலின்றி, விரும்பித் தழுவிக் கொள்வது உலகிய லறமாதலால், “இனம் பிடியாமையுமுண்டோ” எனவும், இனமாகிய அன்பர்களின் அன்பு வலைக்குள் பிணிப்புண்டு கிடத்தலின், அவர்களது இகழ்ந்துரையும் புகழுரையாகக் கருதி மகிழ்வது உலகியல் வாழ்க்கையின் இயற்கை என வற்புறுத்தற்கு “உண்டெனில் அன்புடையார் ஏசல் புகழ் பேசலென உலகு இயம்புதல் என்” எனவும் இயம்புகின்றார்.
இதனால், யான் நின் தொண்ட ரினத்தவனாதலால், என், குற்ற மொழிகளைப் பொறுத்து என்னையேற்றருள்க என முறையிட்டவாறாம். (8)
|