3015. நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்
நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த
வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்
சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்
தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே.
உரை: தலைவரே, ஆன்மாவாகிய யான் உமது வயப்பட்டிருப்பது போல், வேறாய்க் காணப்படும் தத்துவமாகிய தோழியும் தாத்துவிகங்களாகிய ஆய மகளிரும் என் வயமாய் இருப்பதிலையாதலால், அவர் மேற் சினங்கொண்டு, சில பேசியதுண்டு; வேறு தீது நினைத்ததில்லை; தூய மெய்யன்பர்களும் மனத்தே வெறுப்புண்டாயின் குறுக்கிடும் விதிவகைகளையும் புறக்கணிப்பீர்களாக என வுரைக்கின்றார்கள்; எண்ணுமாறு விதிகளை வகுத்தவரையும் வெறுத்துரைப்பது அவர்கள் துணிந்த கருத்தாகிறது; தீயவ ரெனினும் குற்றம் உண்டாகாதவாறு சொல்வார்களாயின் தீச்சொல்லாகாது என்பர்; திருவள்ளுவதேவரும் அதுவே செப்புகின்றார். எ.று.
நாயகன் - தலைவனாகிய சிவன். சிவனது திருவருள் நெறியினிற்பது பற்றி, “உமது வசம் நான் இருக்கின்றது போல்” என்றும், ஆன்மாவாகிய உயிரின் உணர்வின் வழி உடல் கருவி கரணங்களாகிய தத்துவங்கள் முப்பத்தாறும், அவற்றின் வழியவாகிய தாத்துவிகங்கள் அறுபதும் தோழியும் ஆயமகளிருமாகக் குறிக்கப்படுவது தோன்ற, “நாடிய தத்துவத் தோழி நங்கையர்” என்றும் கூறுகின்றாள். தத்துவத் தொகுதிகள் தத்தமக் கேற்ற நெறியிற் சொல்லுவ தன்றி ஆன்மாவின் இச்சை வழி நிற்ப தில்லையாகலின், “என் வசத்தே மேயவ ராகாமையினால்” எனவும், அதனால் வெய்ய சொற்கள் சிலவற்றைப் பேசுகின்றேன் என்பாளாய், “அவர் மேல் அங்கெழுந்த வெகுளியினால் சில புகன்றேன்” எனவும், திருவருளைக் குறை கூறும் கருத்து எனக்கில்லை என்பாளாய், “வேறு நினைத்தறியேன்” எனவும் இயம்புகின்றாள். வெகுளியால் உள்ளத்தில் தோன்றும் வெறுப்பு தூயமெய் யுணர்ந்தோரையும் விடுவதில்லை; மெய்ம்மைச் செயல் புரியுமிடத்து விதி வகைகள் தடை செய்யினும் அவற்றை மதியார் என்றற்குத் “தூயவரே வெறுப்புவரில் விதி வெறுக்க என்றார்” என்றும், செய்க என விதித்த மேலோரையும் விலக்குவது அவர் கருத்தாகிறது என்பாள், “சூழ விதித்தாரை வெறுத்திடுத லவர் துணிவே” என்றும் கூறுகின்றாள். விதியை விலக்குவது விதித்தாரைப் புறக்கணிப்பது போலாம் என வுணர்க. குணமாவன மொழிபவர் தீயவராயினும் பயன் கருதி மேற்கோடல் தக்கதென்னும் அறநெறியாதல் பற்றி, “தீயவராயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ மொழியன்று” எனவும், அறநூல் ஆசிரியராதலால், திருவள்ளுவரைத் “தேவர் செப்பியதும் அஃதே” எனவும் இசைக்கின்றாள்.
இதனால், தீங்கு நினையாது மொழிவன யாவர் கூற்றாயினும் கொள்ளற் பாலன எனத் தெரிவித்துக் கொண்டவாறாம். (9)
|