39. வேட்கைக் கொத்து

தலைமகள் பாங்கியொடு கூறல்

    அஃதாவது, பெருந்திணை நங்கையின் விழைவுகளையும் விருப்பத்தையும் எடுத்துத் தன் தோழிக் குரைப்பனவற்றின் தொகுதி என்பதாம். தொகையைக் கொத்து என்பதும் உண்டு. கட்டுரைத் தொகுதியைக் கட்டுரைக் கொத்து என வழங்குவது போல். இதன்கண் இறைவன் திருவருட் தொடர்பு பெற்றவள் துன்பக் குழியில் வீழாமையும், திருவருளின்பத்தைத் தொடர்ந்து பெறும் விருப்பமும், அவனைக் கூடல் வேட்கையும், அருள் பெறத் தாழ்க்கினும் அவனை விட மாட்டாமையும், அவன் தன்னைக் கைவிடல் முறையாகா தென்பதும் இன்னோரன்ன பிறவும் உரைக்கப்படுகின்றன.

எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்

3017.

     விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கும்
          மேலானான் அன்பருளம மேவுநட ராஜன்
     பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
          பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
     பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
          பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
     கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
          கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ

உரை:

     தோழி, வானளாவிய சாலைகளையுடைய தில்லையம்பலத்தையுடையவனும், தேவர்களனைவர்க்கும் மேலானவனும் மெய்யன்பர் திருவுளத்தில் எழுந்தருள்பவனுமாகிய நடராசப் பெருமான், நற்பண்புடைய என்னை அறிவறியாத இளமைப் பருவத்திலே அன்புடன் என்னிடம் வந்து மணமாலை சூட்டி என்னை ஆட் கொண்டவன், மீள என்னை யடைந்து என் முகம் பார்த்திலன்; பெண்மை நலம் கொண்ட ஏனைப் பெண்களெல்லாரும் என்னை அவ மதிப்பதுடன், தமது வாயில் வந்தது பேசுகின்றார்கள்; நானும் அவர்களைக் காண மாட்டாமல் நாணுகின்றேன்; பிச்சி யென்று பிறரால் ஏசப்படுகிறேன்; பார்க்கும் கண்ணுடையராவும் பாராது குழியில் விழுவது முறையாமோ? அவனது அருட் குறிப்புணர்ந்தேனாகலின் அவனைவிட மாட்டேன், காண். எ.று.

     தில்லைப் பதியிலுள்ள சோலைகளின் உயர்வும் வளமும் விளங்க, “விண் படைத்த பொழில் தில்லை” என்றும், அவனுடைய சபையினை வேறு தேவ ரெவரும் ஆடரங்காக் கொள்வ தின்மையால், “அம்பலத்தான்” என்றும், “முன்னைப் பழம்பொருட் கெல்லாம் முன்னைப் பழம்பொருளா”தல் பற்றி, “எவர்க்கும் மேலானான்” என்றும், தன்னைத் தூய அன்புடன் நினைந்து வழிபடும் பெருமக்கள் மனமே தனக்குக் கோயிலாகக் கொள்பவ னென்பதனால், “அன்பர் உளம் மேவும் நடராசன் என்றும் புகழ்கின்றாள். பண்பாவது பொருள் தோன்றும் போதே உடன் தோன்றுவ தெனத் தருக்க நூல்கள் கூறுதலால், “பண் படைத்த எனை” எனவும், அறியத் தகுவன இவை யென்று அறிந்து கொள்ளலாகாத பருவம் இளமையாதல் பற்றி, “எனை யறியா இளம் பருவம் தனிலே” எனவும் இசைக்கின்றாள். அறிவறியும் மெய்யறிவு பெற்றோர் வழி முறையாலும், நற்கல்வியாலும், சூழ்நிலையாலும் உளதாவதென அறிஞர் உரைப்பர். அறிவறியேனாகவும் எனது இளமை வளம் கண்டு என்பால் அன்பு கொண்டு யான் அவனையே விரும்பி நினைந்து ஒழுகுமாறு செய்தொழிந்தான் என்பாளாய், “பிரிந்து வந்து மாலை யிட்டான்” என்று கூறுகின்றாள். இது தனக்கும் தலைவனாகிய கூத்தப் பெருமானுக்கும் காதல்றொடர்பு உண்டாகிய வரலாற்றினைத் தலைவி கூறியதாம். இத் தொடர்பு கெடாமை வேண்டி மீள மீளப் போந்து கண்டும் உரையாடியும் கூடியும் உறுதி பெற்றிலதாயினும், என்னுடையஅன்பு மெலிவுற்ற தில்லை என்பாள், “பார்த்தறியான் மீட்டும்” என விளம்புகிறாள்.பெண்படைத்த பெண் என்பது பெண்மைக்குரிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நாற் குணமும் உடைய தன்மை. தொல்காப்பியர் முதலிய பண்டைச் சான்றோர், பயிர்ப் பொழிந்த மூன்றையுமே எடுத்துரைத்தனர்; பிற்காலத்திற்றான் பயிர்ப்புச் சிறப்பாகப் பேசப் படுவதாயிற்று. பயிர்ப்பாவது காமக் கூட்டத்துக் கின்றியமையாத இனிய பெண்மைத் தன்மை; உண்மை நோக்காதுஇதற்கு வேறு வேறு கூறுவாரும் உண்டு. பயிர்ப்பின்மையை ஆங்லேயர் (Frigidity) என்பர். குணக் குறை யுடையவர் நன் மதிப்புப் பெறாராகலின், “அவமதித்தே வலது பேசுகின்றார்” என்றும், பித்தேறியவள் என இகழ்வது புலப்பட, “பிச்சி யெனலானேன்” என்றும் உரைக்கின்றாள். “பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்” (ஆரூர்) எனத் திருநாவுக்கரசர் கூறுவ தறிக. வரும் துன்பத்தை விலக்குதற்குரிய அறிவும் செயல் வகையும் கொண்டிருந்தும் அதற்கு இரையாகுபவர் இல்லை யென்றற்குக் “கண் படைத்தும் குழியில் விழக் கணக்கு முண்டோ” எனவும், வழி வகையும் செயற் றிறமும் பெற்றுள்ள யான் துன்புறேன் என்பாளாய்க் “கணக்கறிந்தும் விடுவேனோ” எனவும் இயம்புகின்றாள்.

     இதனால், தில்லையம்பலத்துக் கூத்தப் பிரானுடைய தொடர்பு பெற்றுள்ளமையால் யான் இனித் துன்பக் குழியில் வீழ்ந்து வருந்தேன் என விளம்பியவாறாம்.

     (1)