3020. தெள்ளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்
அளித்தறியான் அணுத்துணையும் அணுபவித்தும் அறியேன்
மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்
மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்
இயல்யறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ.
உரை: தெளிந்த ஞான வமுதத்தைப் பருகும் ஒப்பற்ற யோகியர் மனத்திலும் பக்தி யோகம் புரியும் சிவஞானச் செல்வர்களின் அறிவின் கண்ணும் நின்று ஞான நடம் புரியும் நடராசப் பெருமான் திருவருளாகிய அமுதத்தை நல்குவே னென்று என்னை அந்நாளில் திருமணம் செய்து கொண்டானாயினும் எனக்கு இன்றுவரை அதனை யளித்தானில்லை; யானும் அதனைச் சிறிதளவும் அனுபவித்ததில்லை; அவன் மனத்தின்கண் மருட்கை யுடையவ னென்றற்கோ, ஒரு வஞ்சனை யுடையவ னென்றற்கோ, சிறிதும் இடமில்லை; திருவுள்ளத்தில் மிக்க அருணிறைந்தவன்; வலிய வினை யுடையவளாகிய என்னைப் பொறுத்த அளவில் இருள் கொண்ட மனமுடையவர் போல அவன் இருக்கும் இயல்புதான் என்னையோ? அவனுடைய இயல்புகளை யான் அறிந்துளேனாதலால் நான் இனி அவனை ஒருபோதும் விடேன், காண். எ.று.
தெளிவும் துவாத சாந்தத்தில் எய்தப் பெறுவதுமாகிய ஞானவமுதத்தை யோக நெறியாளர் பெற்று மகிழ்வது தோன்றத் “தெருளமுதத் தனி யோகர்” எனவும், அவரது தூய ஞானத் திருவுள்ளம் சின்மயமாதலால் அதன்கண் சிவஞானத் திருநடம் நிகழ்வது பற்றி “யோகர் சிந்தையிலும்” எனவும், அன்பு செய்தொழுகும் மெய்யுணர்ந்த பக்தி ஞானிகளின் அறிவின் கண்ணும் சிவன் திருக்கூத்து நிகழ்தலின் “ஞானச் செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராசன்” எனவும் இயம்புகின்றாள். திருவருள் ஞானமே சிவஞானச் சீரமுதமாம் என்பது பற்றி, அதனைப் பெறுதற் கென்றே யான் அவனை மணந்து ஆட்பட்டேனென்பாளாய், “அருளமுதம் அளிப்ப னென்றே அன்று மணம் புணர்ந்தான்” என வுரைக்கின்றாள். அவனுக்கு நான் அடிமை யென்றும், அவன் என்னை யாண்டவ னென்றும் தொடர்புற்றது இங்கே மணம் புணர்தல் எனக் குறிக்கப்படுகிறது. இங்ஙனம் அப்பெருமானும் யானும் முறையே ஆண்டானு மடிமையுமாகியும், ஆண்ட அவனது அருள் ஞான போகத்தை இன்று காறும் தந்திலன் என்பாளாய் “அளித்தறியான்” என்றும், எனக்கு அறியாமலே அளித்திருப்பானாயின், யான் என் அறிவால் அனுபவித் தறிந்திருப்பேன்; அது தானும் ஒரு சிறிதும் இல்லை யென்பாளாய், “அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்” என்றும் இசைக்கின்றாள். அருளுருவாகிய அப்பரமன் அருளாமைக்குக் காரணம் ஆராயின், அருட்கு மறுதலையாய மருளுணர்வு அவன்பால் இல்லையென்றற்கு “மருளுடையா னல்லன்” என்றும், தனது அருணலத்தை மறைத் தொழுகுகின்றது அவற்கில்லை என்றற்கு, “ஒரு வஞ்சகனுமல்லன்” என்றும் தெளிந்தமை புலப்படப் புகல்கின்றாள். இரக்கமில்லாத உள்ளத்து மறக்கண்ணுடையனுமல்ல னென்பாள், “மனமிரக்கம் மிக வுடையன்” எனக் கூறுகின்றாள். இப் பெற்றியனாகிய பெருமான் எனக்கருளாமைக் கேது எனது தீவினை என்பாளாய், “வல்வினையேன்” எனவும், அறியாதார் போல அவன் இருக்கும் தன்மையை என்னால் அறிய முடியவில்லை என்பாளாய், “இருளுடையார் போலிருக்கும் இயல்பு என்னை” எனவும், எவ்வகையிலும் எவர்க்கும் அருளாது ஒழியாத அவனது மாண்பை நன்கறிவேனாகலின், அருள் பெறுமளவும் யான் அவனது பற்றைக் கையொழிவேன் என்பாளாய், “அவன்றன் இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்” எனவும் இயம்புகின்றாள். இருள் - அறியாமை.
இதனால், இறைவன் அறியாதான் போன்ற அருள் புரியத் தாழ்க்கினும் யான் விடேன் என விளம்பியவாறாம். (4)
|