3021. சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
திருநடஞ்செய் பெருங்கருணைச் செல்லவநட ராஜன்
என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
உரை: ஞானகாசமாகிய அம்பலத்திலே தற்சிவமாய் நின்று திருவருள் நடனம் செய்கின்ற பெரிய கருணை யுருவாகிய செல்வ நடராசப் பெருமான், எனது உண்மைத் தன்மையே அறியும் அறிவெய்தாத இளமைப் பருவத்திலே எல்லா அறிஞர்களும் காண என்னை மணம் செய்து கொண்டான்; ஆயினும் இன்ப வுணர்வே இல்லாதவர் போல இப்போது என்பாற் போந்து கூடி மகிழ்விக்கின்றானில்லை; யானும் அவர் கூடுதற்கு விரும்பாமைக் கேதுவாக ஒரு சிறு குற்றமும் செய்த்தில்லை; மேலும் அப் பெருமானுடைய திருவுளம் தானும் கல்லின் தன்மையுடைய தன்று; சுவை மிகுந்து கனிந்த கனி போல்வதாகும்; அத் தன்மையை யான் சான்றோர்களால் நன்கறிவேனாதலால் அவன்மேல் அன்பு செய்வதை நான் விட மாட்டேன், காண். எ.று.
சித் மயம் - சின்மயம் என வருவது வட மொழிப் புணர்ப்பு; சத்மார்க்கம், சன்மார்க்கம் என வருதல் போல. சிதம்பரம் என்று வழங்குவது ஞான ஆகாசம் எனப் பொருள் படுவதாகலின், சிதம்பரத்தில் விளங்கும் அம்பலத்தைச் “சின்மயமாம் பொது” எனவும், அதன்கண் சத்தியாகிய உமாதேவி வேறாய்த் தனி நின்று காணச் சிவபரம் பொருளே தனி நின்று திருக்கூத்தாடலால் “தன்மயமாய் நின்று திருநடஞ்செய் செல்வ நடராசன்” என்றும், பேரருளே உருவாகிய மூர்த்தமாதல் விளங்க, “பெருங் கருணைச் செல்வ நடராசன்” என்றும் இயம்புகின்றாள். மலம் காரணமாக வந்த உடல், கருவி கரணங்களோடு கூடி யிருப்பினும், அறிவிச்சை செயல்களையுடைய சத்தாகிய சித்துப் பொருளாம் தன்மை ஆன்மாவாகிய தனது தன்மை என்பதை, இளம் பருவத்தில் உடல் வழி நிற்கும் உயிர் உணராமை பற்றி “என்மயம் நான் அறியாத இளம் பருவம் தனிலே” எனவும், அப் பருவத்திலே என் அறிவிற் கலந்து எனக்குத் திருவருள் வேட்கையை யுறுவித் தான் என்பாளாய், “இளம் பருவம் தனிலே என்னை மணம் புரிந்தான்” எனவும், இஃது ஆன்ம ஞானிகள் அனைவரும் அறிந்த வுண்மை என்றற்கு “ஈது எல்லாரும் அறிவர்” எனவும் எடுத்துரைக்கின்றாள். இக்கருத்துப் புலப்பட, “பருவத்தில் வந்து பயனுற்றபண்பன் அயனைப் படைத்தபரமன்” (தென்முல்லை) வாயில் என ஞானசம்பந்தர் குறிப்பது காண்க. ஆன்ம ஞானிகளாவார், ஆகமவறிவு கொண்டு ஆன்மாவின் பொதுவும் சிறப்புமாகிய ஞான மெய்தியவர். “ஆகம சீலர்க் கருள் நல்கும் பெம்மான்” (ஆரூர்ப் பரவையுள்) என நம்பியாரூரர் நவில்வது காண்க. இன்மயம், இன்பவுணர்வு. இன்று -பருவ முற்ற இந் நாளில். அறிவிற் கூடி யின்ப மருளாமைக்குக் காரணம் காண்பவள், தன்பாற் பிழை சிறிதும் காணாமையின், “இறை யளவும் பிழை புரிந்தேனில்லை” என்றும், அது கேட்கும் தோழி அப் பெருமான் கன்மனத்தானாகலாம் எனத் தடை கூறினாளாக, அவளை மறுப்பாளாய், “அவன் இதயம் கன்மயமோ அன்று” என்றும், அளித்த இன்சுவைக் கனி போல்வது என அறிந்தோர் சொல்லக் கேட்டுள்ளேன் என்பாள், “சுவைக் கனி மயமே என்னும் கணக்கறிந்தும்” என்றும், அறிவ தறிந்தும் செயல் படாமைக் குற்றமாதலால், “விடுவேனா கண்டாய்” என்றும் கிளந்துரைக்கின்றாள்.
இதனால், இறைவன் மென்மைப் பண்பறிந்து பற்று விடுதல் முறையாகா தென மொழிந்தவாறாம். (5)
|