3022.

     எண்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்
          என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்
     பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே
          பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்
     வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்
          வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்
     வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்
          விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ.

உரை:

     தோழி, எட்டாகிய குணங்களை யுடையவனும், எல்லார்க்கும் இறைவனும், எல்லாம் செய்ய வல்லவனும், எனக்கு அகத்திலும் புறத்திலும் இருப்பவனுமாகிய இன்ப நடராசப் பெருமான், எனது பெண்மைக் குணத்தை அறியாத என்னுடைய இளம் பருவத்திலே வேட்கையை யுறுவித்து மணம் செய்து கொண்டானாக நானும் மன மிகவும் மகிழ்ந்திருந்தேன்; வளவிய அவனது குணநலத்தால் பெறுதற்கமைந்த திருவருள் அனுபவத்தை அறிதற்குக் கமைந்த இக்காலத்தில் அவன் என்பால் வருகின்றானில்லை; தனது சிவானந்தத்தைத் தருகின்றானுமில்லை; ஆயினும் அவன் வெண்மைக் குணமின்றி, மிக்க நற்குணம் சான்றவன் எனப் பன்முறையும் கண்டிருக்கின்றேனாதலால், அவன்பால் உளதாகிய என் காதலன்பைக் கையொழிய முடியுமா? நீ சொல். எ.று.

     என் குணங்களாவன, தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப முடமை என்பனவாம். “இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்ட” தென்பர் பரிமேலழகர். எந்நாட்டு எவ்வெவர்க்கும் இறைவனாதலால், “எல்லோர்க்கும் இறைவன்” என்கின்றாள். மண்ணக மக்கட்கே யன்றி விண்ணகத் தேவர்கட்கும் இரண்டுலகத்திலும் இயங்கும் முனிவர்க்கும் பிறர் யாவர்க்கும் என்பது புலப்பட, “எல்லார்க்கும்” என வுரைக்கின்றாளுமாம். இந்தியர்க்கே யன்றி ஐரோப்பியர், ஐபீரியர், ஆப்பிரிக்கர், ஆஸ்திரேலியர், ஐசுலாந்தியர், சீனர், சைபீரியர், சப்பானியர் முதலிய பலர்க்கும் இறைவன் என்கிறாள் என்றுமாம். பழையன கழித்தலும் புதியன தோற்றுவித்தலும் எல்லாம் செய்ய வல்லவன் என்றற்கு “எல்லாம் வல்லான்” எனக் கூறுகின்றாள். எவ்வுலகத்தும் உயிர்ப் பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றிலும் அகத்தும் புறத்தும் அணுப்புதைக்கவும் இடமின்றிக் குறைவற நிறைந்த எனது அகத்திலும் புறத்திலும் கலந்துள்ளான் என்பது தோன்ற, “என் அகத்தும் புறத்தும் உளான்” என வுரைக்கின்றாள். “புறத்தினர் அகத்துளர் போற்றி நின்றழு தெழும் அன்பர் சிந்தைத் திறத்தினர்” (அம்பர். மாகா) என ஞானசம்பந்தர் நவில்வ தறிக. எவ்வுயிர்க்கும் இன்பம் விளைவிக்கும் அருட்டிருக்கூத்தாதல் பற்றி, “இன்ப நடராசன்” என இயம்புகின்றாள். பெண்ணியல்பாகிய நாணம் அச்சம் முதலியவற்றைக் கொள்ளாத, சிறுமியாகிய பருவத்தைப் “பெண் குணத்தையறியாத இளம் பருவம்” என வுரைக்கின்றாள். மார்பிற் கொங்கையரும்பும்போதே நாணமும் பயிர்ப்பும் தோன்றுதலின், “பிச்சேற்றி” எனக் கூறுகிறாள். பித்து-பிச்சு என மருவும்; ஈண்டு அருட்காதல் வேட்கை என அறிக. திருவருள் ஞான வினபம் துய்த்தமை யுணர்த்தற்குப் “பெரிது களித்திருந்தேன்” என்று பேசுகின்றாள். வண்குணம்; தனது திருவருளை வரையாது வழங்கும் வண்மை நலம். குணமில் வழிச் செயலின்மையின், வண்குணத்தால் நல்கும் திருவருள் இன்பப் பேற்றால் உளதாகும் இன்பானுபவம், திருவருளனுபவம் என விளக்குதற்கு “வண்குணத்தால் அனுபவம் நான் அறிய நின்ற பொழுதில்” என்று புகல்கின்றாள். அனுபவம், அழுந்தி யறிதல் என்பர் மாதவச் சிவஞான முனிவர். ஈங்குச் சிவனருளில் அழுந்தி யறிதலாயிற்று. அறிய நிற்கும் பொருளாதலால், “அனுபவம் அறிய நின்ற பொழுது” எனல் மிகவும் பொருத்தமாதல் காணலாம். ஞான முதல்வனாய் எழுந்தருளுவதோ, ஞான வின்பானுபவமோ பெறுவித்திலன் என்பாளாய், “வந்தறியான் இன்ப மொன்றும் தந்தறியான்” எனவும், தக்கார் தகவறிந்து தகுவது செய்யும் சால்புடையனல்லன் போலும் என ஐயுறாமைப் பொருட்டு, அவனும் “வெண்குணத்தா னல்லன்”, “மிக நல்லன்” என மிகுத்தும் புகழ்கின்றாள். மிக நல்லன் என்பது மிகுத்துரை. வெண்குணம் - புன்மைக் குணம். “வெண்மை யெனப்படுவது யாதெனின், ஒண்மை யுடையம யான் என்னும் செருக்கு” (குறள்) என்பர் திருவள்ளுவர். அவனது திருவருள் எய்துங் காலம் நோக்கியிருக்கும் திறத்தைப் “பலகால் விழித்திருந்தும்” என்பதனால் வெளிப்படுகின்றாள்.

     இதனால், திருவருட் பேறு எய்தும் திறம் நோக்கி யிருப்பது விளம்பியவாறாம்.

     (6)