3023. பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்
திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
நையாத என்றன்உயிர் நாதன் அருட் பெருமை
நான்றிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ.
உரை: தோழி, நிலைத்த புகழை யுடையவனும், அம்பலத்தில் நடிப்பவனும், சிவபுண்ணியச் சீலர் திருவுள்ளத்தைச் சேர்பவனுமாகிய தூய நடராசப் பெருமான், பறிக்கப்படா அரும்பு போன்ற இளம் பருவத்திலே என்னை விரும்பி மணந்து கொண்டவன் மீளஎன்பால் வரக்காணேன்; அவற்கு அன்பராயினார் செய்யாத குற்றச் செய்கை யொன்றும் நான் சிறிதளவும் செய்ததில்லை; என் ஒருத்தியின் உள்ள நினைவுகள் யாவற்றையும் அவனது திருவுள்ளமே நன்கறியும்; கொடாத என் உயிர்த் தலைவனாகிய அப்பெருமானுடைய திருவருட் பெருமையை நான் அறிவேனாதலால் அவனை ஒருகாலும், விடேன்; அறிக. எ. று.
பொய்த்தல் - நிலையின்றிக் கெடுதல். பொது - தில்லையின்கண் உள்ள திருச்சிற்றம்பலம். நடம், திருக்கூத்து. புண்ணியர் - புண்ணியப் பொருளாகிய சிவனைப் பூசிக்கும் புண்ணியர். அவர்களின் திருவுளத்தைக் கோயிலாகக் கொள்வது பற்றி, “புண்ணியர்பால் நண்ணிய நற்புனித நடராசன்” என்று புகல்கின்றாள். ஏனை மக்களும் பிறரும் ஆடும் கூத்து வகைகள் காம வேட்கையை விளைக்கும் குற்ற முடையவாதலால், “புனித நடராசன்” எனச் சிறப்பிக்கின்றாள். புதிது தோன்றி மலராப் பருவத்து நல்லரும்பு என்றற்குக் “கொய்யாத அரும்பைக்” குறிக்கின்றாள்; நலம் புதிதாய இளமைச் செவ்வியை “அரும்பனைய இளம் பருவம்” என நயம்பட வுரைக்கின்றாள். குறித்தல் - குறிக் கொண்டு விரும்புதல். மிக்க ஆர்வத்துடன் மணந்து கொண்ட பெருமான், பன்முறையும் வரற்பாலனாகியும் மீள ஒருமுறையும் வந்தில னென்பாள், “மறித்தும் வரக் காணேன்” என வருந்துகின்றாள். குற்றமேதேனும் செய்தேனாயின் அவன் வாரா தொழிதல் ஒக்கும்; இளமகளிர் செய்யலாகாத குற்றமொன்றும் செய்திலேன் என்பாளாய், “செய்யாத செய்கை யொன்றும் செய்தறியே” னெனச் செப்புகின்றாள். “செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்” (திருப்பாவை) என நாச்சியாரும் நவில்வர். உள்குவார் உள்ளுவ தெல்லாம் உடனிருந்தறியும் பரம்பொருளாதலின், “திருவுளமே யறியும் மற்றென் ஒரு வுளத்தின் செயல்கள்” என உரைக்கின்றாள். “உள்குவார், உள்கிற்றெல்லாம் உடனிருந்தறிதி யென்றே வெள்கினேன்” (தனி நேரிசை) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. மறவாமல் வந்தருளுவன்; வாரா தொழியா னென்ற ஆசையால் வாழ்கின்றமை தோன்ற, நையாத என்றன் உயிர் நாதன்” என மொழிகின்றாள். காணுமாசையால் நையாத மனம் என்பது கருத்து. “நையாத மனத்தினனை, நைவிப்பான் இத்தெருவே ஐயா நீ உலாப்போந்த அன்று முதல்” (திருவிசைப்) எனப் பெரியோர் உரைப்ப தறிக. அருளாமை இயல்பன்மை இறைவன் திருவருட் பெருமை. அதனை யறிந்தவிடத்து அச்சமின்மை பற்றி, “அருட்பெருனை நான் அறிந்தும் விடுவேனா” என இயம்புகின்றாள்.
இதனால், இறைவன் அருட் பெருமை யறிந்தமை நினைந்து விளம்பியவாறாம். (7)
|