3024. கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்
கணக்கிறவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்
தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்
பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்
உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ-
உரை: தோழி, எனக்குக் கண் போன்றவனும், என்னுடைய உயிர்க்குயிராய்க் கலந்து நிற்கின்ற கணவனும், முறை யறிவதையன்றிப் பிணங்கி வேறுபடுதலை யறியாதவனுமாகிய, கருணையுருவாகிய நடராசப் பெருமான், தண்ணிய தளிர்க்கொழுந்து போன்ற எனது இளம்பருவத்தில் என்னைத் தனிப்ப விருத்தித் தானே, வலிய வந்து அருள் செய்து தனியாக மாலை யணிந்தான்: என்னைப்போன்ற மகளிர் என்னைத் தாம் நினைந்தவாறு ஏசிப் பேசினராயினும், நான் சிறிதும் நாணுதலின்றிப் பெருமிதத்தோடே இருந்தேனாக, அவனும் என்னுடைய பெருமை முற்றும் கண்டு கொண்டான்; ஆயினும் என் மனம் அவனது அருள் நீரால் நனைந்து தணியாவாறு தன் வருகை தாழ்க்கின்றான்; இப்பொழுது அவனுடைய திருவுள்ளத்தை நன்கறிந்தேனாகலின், இனி அவனை விடுவேனோ, சொல்லுக. எ.று.
உண்மையுணரும் ஞானக் காட்சி தந்தமை புலப்படக் “கண்ணனை யான்” என்றும், உயிர்க்குயிராய் நிற்றலின், “என்னுயிரிற் கலந்து நின்ற கணவன்” என்றும் இயம்புகின்றாள். கணக்கு, உயிரினத்தை அருளும் முறை குறித்து நிற்கிறது. எவ்வுயிர்பாலும் இணங்கி யருள் செய்வதன்றிப் பிணங்கி வேறுபடுதல் இறைவனியல்பன்மை பற்றிக் “கணக்கறிவான் பிணக்கறியான்” எனப் பேசுகின்றாள். கருணையுருவினனாதல் விளங்கக் “கருணை நடராசன்” என்கின்றாள். நனை, இளந்தளிர்; கொழுந்துமாம். இயல்பாகவே குளிர்ந்திருப்பது பற்றித் தண்ணனை யெனப்படுகிறது. இளம் பருவமும் தண்ணியே நனை போல்வதால் “தண் நனையாம் இளம் பருவம்” எனச் சாற்றுகின்றாள். திருவருட் பேறு தனி நிலையில் எய்துவதாகலின், “எனைத் தனித்துத் தானே வந்து அருள் புரிந்து” என்றும், திருவருள் ஞானம் பெற்றார் அதனையே நினைந்து அதற்குரிய பணியே செய்தும் மொழிந்தும் ஒழுகுபவாதலின், “தனிமாலை புனைந்தான்” என்றும் இயம்புகின்றாள். திருவருள் ஞானமில்லாத பேதை மாக்களைப் “பெண்ணனையார்” எனவும், அவர் பேசுவன பொருளில் வறுங் கூற்றுக்க ளென்றற்குக் “கண்டபடி பேசவும்” எனவும், திருவருளின்பத்தில் இறுமாந்திருந்தமை விளங்க, “நான் கூசாப் பெருமையொடும் இருந்தேன்” எனவும் கூறுகின்றாள். “பேசுவதென் அறிவில்லாப் பிணங்களை நாம் இணங்கிற், பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர் விடு நீ” (சிவ.சித்தி.122) எனப் பெரியோர் கூறுவது நினைக. பெருமை - பெருமிதம். அருமை, திருவருளின்பப் பேற்றுக்குரிய தகைமை. உலகியல் வெம்மையால் திருவருள் வேட்கை தணியாமை பற்றி, “உள் நனையா வகை வரவு தாழ்ந்தனன்” என்றும் உலகியற் பற்றற்ற விடத்து வீடு பேறு அளிப்பது அப்பெருமான் திருவுள்ளமாதலை யறிந்து கொண்ட வீறு விளங்க, “இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய்” என்றும் இனிதுரைக்கின்றாள்.
இதனால், வீடு பேறெய்தும் இயைபுணர்ந்த பெருமிதத்தைப் பேசியவாறாம். (8)
|