3025.

     ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
          உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
     பான்மறந்த சிறியஇளம் பருவமதின் மாலைப்
          பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
     தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
          தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
     கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
          குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ.

உரை:

     தோழி ஊனுடம்பின் வேறாகிய உயிர், முற்றும் ஒளியாய் நிறைந்துறையும் ஒருவனாகிய இறைவனும், உலகனைத்தையும் தனக்கு உடைமையாகவுடையவனுமாகிய என்னுடைய நடராசப் பெருமான், தாய்ப்பாலை யுண்ணுதலை நீங்கிய இளமை மிக்க பருவத்திலே, என்னை விரும்பி எனக்கு மாலையணிந்து அறிவறிந்த இப் பருவத்தில் என்னை நினையா தொழுகுகின்றான்; அவன் தான் என்னை மறந்தானாயினும், இங்கே இப்பொழுதில் நான் அவனை மறக்க மாட்டேனாயினேன்; தவநெறி கொண்டுயர்ந்தோர் அவநெறியில் வீழ்ந்து கெட விரும்பாரன்றோ? அரசனால் மறந்து கைவிடப்பட்ட குடிகளைப் போலத் துன்புறுவேனாகிய யான், அவனுடைய குணநலங்களை யறிந்தும் மறந்தொழிவேனோ? நீயே கூறுக. எ.று.

     உடம்பின் நீங்கும் காலத்தில் உயிர் அதனை மறவாது, உடன் கொண்டு செல்வதில்லையாகலின், “ஊன் மறந்த உயிர்” எனவும், உயிரின்கண் உணர்வொளியாய்க் கலந்து நிறைந்திருக்கும் இறைவனது தன்மை விளங்க, “உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன்” எனவும் இசைக்கின்றாள். கடவுளாகிய பரம்பொருள் ஒன்றேயாதலின், “ஒருவன்” எனச் சிறப்பிக்கின்றாள். இதிகாச புராணங்களும் வேதங்களும் கடவுளர் பலரைக் கூறினாலும், அவர்கட் கெல்லாம் மேலாகிய பரம்பொருள் ஒன்றே; இரண்டும் பலவுமல்ல என்று இதனாலும் அறிக. ஒருமைச் சமுதாயத்தைப் பல்லாயிரம் சாதியும் இனமுமாகப் பிரித்து, ஒன்றொடொன்று ஒட்டி உறவு கொள்ளாவாறு பிரித்தழித்த சூழ்நிலை, மொழி சமயம் முதலியவற்றின் பெயரால் ஒன்றாகிய பரம்பொருளையும் பல்லாயிரம் தெய்வங்களாகப் பிரித்துப் போரும் பூசலும் விளைவித்துக் கெடுத்த கொடுமையை, மக்களின் வரலாறு கூறுவது காண்க. பரம்பொருளாகிய ஒருவனுக்கும் உலகுக்குமுள்ள தொடர்புணர்த்தற்கு அவனை உடையவனென்றும், உலகை அவனது உடைமை யென்றும், கூறுவாளாய், “உலக மெல்லாம் உடையவன்” என வுரைத்துத் தனக்கும் அவனுக்குமுள்ள உறவை, “என்னுடைய நடராசன்” என்று கூறுகின்றாள். தாய்ப்பாலை யுண்டு வளரும் குழவிப் பருவம் நீங்கிப் பேதைப் பருவம் எய்திய காலத்தேயே, தூயதாகிய என் மனத்தில் தனது திருவருளுறவை யுணர்த்தி விட்டானென்றற்குப் “பால் மறந்த சிறிய இளம் பருவத்தில் மாலை பரிந்தளித்தான்” எனவும், அறிவு, உரு, அகவையாகிய மூன்றாலும் சிறுமையுற்ற பருவமாதல் விளங்கச் “சிறிய இளம் பருவ” மெனவும் இசைக்கின்றாள். அறிவதறிந் தடங்கி வாழும் பெதும்பைப் பருவம் எய்தியபோது அன்புற்றுவருதற் குரியவன் வாரானாயினன் என்பாளாய் “பருவ மிதிற் பரியான்” எனப் பகர்கின்றாள். பரிதல் - அன்பு செய்தல். நினைப்பு மறப்பில்லாத நீர்மையனாகிய இப் பெருமான், என்னை மறந்து விட்டான்; இரண்டுமுடைய நான் மறவாமல் அவனை நினைக்கின்றேன் என்பாள், “தான் மறந்தானெனினும் இங்கு நான் மறக்க மாட்டேன்” எனவுரைக்கின்றாள். இங்கு, நினைப்பு மறப்புக்களை விளைவிக்கும் இவ்வுலக வாழ்வு. தவத்தை மலைக்கும் அவத்தைப் பள்ளத்துக்கும் ஒப்புமை கூறுவது மரபாதலால், தவம் செய்வார் அவம் நினையார் என்னும்முறைமை பற்றி, “தவத்தேறி அவத் திழியச் சம்மதமும் வருமோ” என இசைக்கின்றாள். சம்மதம் - மன விசைவு. அரசன் கோல் நோக்கி வாழ்வது குடி; அவனால் மறக்கப்பட்ட குடிகள் காப்பும் காவலும் முறையும் இழந்து, துன்புறுவரென்பது பற்றி, “கோன் மறந்த குடியேபோல் மிடியேன்” எனமொழிகிறாள். மிடி, துன்பம். இந்நாளைய அரசு, குடிகளை நினையா தொழிந்தமையால், மக்களிடையே சமுதாயத் துரோகிகள் மலிந்து ஆட்சி, தொழில், வாணிகம் முதலிய வாழ்க்கைக் கூறுகளைக் கைப்பற்றிக் கொண்டனராதலின், குடிமை மிடிமைக் கிரையாய் மெலிவது கண்கூடாக வுளது. எனினும், யான் அப்பெருமானுடைய அருணலங்களை அறிந்துளேனாதலால், நான் அவன் திருவடிகளை விட மாட்டேன் என்பாளாய், “அவன்றன் குண மறிந்தும் விடுவேனா கூறாய்” என்று எடுத்துரைக்கின்றாள்.

     இதனால், இறைவன் குணநலம் அறிந்தமையால், அவன் மறக்கினும் தான் மறவாமல் விடாப் பிடியுடன் இருக்கின்றமை தலைவி தோழிக் குரைத்தவாறாம்.

     (9)