3026.

     தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
          தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்
     இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
          என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
     அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ
          அவன் அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
     துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்
          சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ.

உரை:

     தோழி, தனிப்பட்டபரநாத மண்டலத்தின், முடி மேலுள்ளதாகிய நாதாந்தத்துக்கப்பால், தலைவர்கள் வணங்க விளங்குகின்ற தலைவனான நடராசப் பெருமான், இனிமை சான்ற திருவருட் சுகத்தையறிய மாட்டாத எனது இளம் பருவத்தில், எனது இலாட நடுவில் எழுந்தருளியது கண்டுள்ளேனன்றிப் பின்பு நான் கண்டதில்லை; மெய்ம்மையான இவ்வரலாற்றை யார்க்கு எடுத்துரைப்பேன்; ஐயோ, அதனை அவனொருவனே யறிவான்; யான் அறிவேன்; எம்மின் அயலார் ஒருவரும் அறியார்; வெறுத்தற் கிடமில்லாதவாறு ஒருகால் சுத்த சிவபோக நிலையைப் பெறும் இன்பத்தைக் கண்டேனாதலால் இனிமேல் அதனைவிடமாட்டே னன்றோ. எ.று.

     சுத்த தத்துவங்களின் மத்தகத் திலங்குவது நாத தத்துவமாயினும், தூலமாகிய பிரகிருதி மாயைக்கும் சூக்குமமாகிய அசுத்த மாயைக்கும் பரமாகிய சுத்த மாயையின், உச்சியின் கண்ணதாதலால், “தனித்த பரநாத முடித்தலம்” எனவும, மாயா தீதமான பராகாயத்தை “மிசைத்தலம்” எனவும் எடுத்தோதுகின்றாள். ஆங்கு அதனைத் தரிசித்து வணங்குவோர் தேவ தேவரிற் றலையாயவராதல் பற்றித் “தலைவ” ரெனலாம் எனச் சாற்றுகின்றாள். அது பற்றியே நடராசப் பெருமான் நடித்தருளு மிடத்தை நாதாந்தப் பொதுவென அறிந்தோர் புகல்கின்றனர். அதனால் நாதாந்த நடன நாயக னென்றற்குத் “தலைவரெலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன்” எனப் புகழ்கின்றாள். தேக சுகம், பிராண சுகம் இரண்டினும் ஞான சுகம் இளமைப் பருவத்தில் அறியப்படுவ தின்மையின், “இனித்த சுகம் அறிந்துகொளா இளம்பருவம் எனவும், இளமைச் செல்வி மாசு மறுவற்ற உள்ளக் காட்சியுடையதாகலின், அது கண்ணாகப் புருவ நடுவே காண நிற்கும் சிவக் காட்சியைப் பெற்றமை புலப்பட “என் புருவ நடு இருந்தான்” எனவும் இயம்புகிறாள். உலகியற் சுகபோக நுகர்ச்சி எய்தியபோது உள்ளம் உலகியற் பசுபாசவுணர்வுகளால் மாசுபட்டுப் புருவ நடுவினும் சிவத்தைக் காணலாகா தொழிந்தமை விளங்க, “பின்பு கண்டேனில்லை” என்று புகல்கின்றாள். புருவ நடு இலாடம் எனப்படும். இளமைக் கண் காண நின்ற சிவக்காட்சி, பருவ மெய்தியபோது காணப் பெறாதாயின செய்தி உண்மையாதல் பற்றி, “அனித்தமிலா இச் சரிதம்” என்றும், இத்தகைய காட்சியனுபவம் பெறுவோர் அரியராகலின், “யார்க் குரைப்பேன் என்றும் இயம்புகிறாள். பிறர் அறிய நிகழாமல் உள்ளத்தே நிகழ்வது விளங்க, “அவன் அறிவான் நான் அறிவேன்” எனவும், அயலார் அறியலாகாமை பற்றி, “அயல் அறிவார் உளரோ” எனவும் உரைக்கின்றாள். உலகியற் சுகங்கள் மிக்க வழி வெறுப்பளிக்கும் நிலையினவாதலால், “துனித்த நிலை விடுத்து” என்றும், சுத்த சிவபோகம் ஒருகாலைக் கொருகால் பெருகி வற்றா முற்றா இன்ப நிலையாதல் கண்டு, “சுத்த நிலையதனிற் சுகம் கண்டும் விடுவேனோ” என்றும் உரைக்கின்றாள். சுத்த நிலை. சுத்தவத்தை; நின்மலாவத்தை யெனவும் வழங்கும்.

     இதனால், நின்மலாவத்தைக்கண், சிவபோகம் பெற்ற திறம் தெரிவித்தவாறாம்.

     (10)