40. அறநிலை விளக்கம்

    அஃதாவது கொல்லாமையாகிய அறத்தின் சிறப்பியல்பை விளக்குவதாம். “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்ற அறநூல் கூறல் பற்றி, புலாலுண்போர் எத்துணை வன்மையை யுடைய சித்தராயினும், அவரை ஞானவானெனக் கூறுதல் கூடா தென்பதாம்.

அறிசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3027.

     மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில்
          கண்விழித்து வயங்கும் அப்பெண்
     உருவாணை உருவாக்கி இறந்தவரை
          எழுப்புகின்ற உறுவ னேனும்
     கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக்
          கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
     குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை
          ஞானிஎனக் கூறொ ணாதே.

உரை:

     ஆண் தன்மை பொருந்திய பனை மரத்தைப் பெண் பனையாக்கி, ஒரு நொடியில் என்புருவைக் கண்ணால் நோக்கி, அழகு திகழும் பெண்ணாக ஆணை வழித் தோன்றிய உருவமாக்கி, இவ்வாறே இறந்து போனவர்களை எழுப்புகின்ற பெரியோனாகிய திருஞானசம்பந்தரைப் போல்பவனாயினும், பிறப்பிறப்புக்கு ளழுந்த இரக்கமின்றி உயிர் நின்ற உடம்புகளைக் கொன்று தின்கின்ற கருத்துடையனாயின், அவனை ஞானி என்று சொல்லலாகாது; இது எமது குரு ஆணை; சிவத்தின் மேல் ஆணை என அறிக. எ.று.

     திருஞானசம்பந்தர் திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கிய அற்புதச் செயலை நினைப்பிக்கும் வகையில், “மருவாணைப் பெண்ணாக்கி” என்றும், திருமயிலாப்பூரில் இறந்து போன பூம்பாவையின் என்புகளைக் கண்ணாற் சிறிது போது நோக்கிப் பெண்ணுருந் திகழ எழுப்பிய அற்புதத்தை, “ஒரு கணத்தில் கண் விழித்து வயகுங்மப் பெண்ணுருவாக்கி” என்றும், திருமருகலில் அரவு கடித்து இறந்துபட்ட வணிகனை உயிர் பெற்று எழச் செய்த அற்புதத்தை “இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்” என்றும் இயம்புகின்றார். ஆண் பெண்ணுருவுகள் திருவருளாணை வழித் தோன்றுவனவாகலின், “ஆணை யுருவாக்கி” எனக் கூறுகின்றார். இனி ஆணாய்த் தோன்றியதைப் பெண்ணாகவும், ஒரு கண நேரம் விழித்து நோக்கிப் பெண்ணுருவை ஆணுருவாகவும் இறந்தவரை எழுப்பவும் வல்ல சித்துடையனாயினும் என உரைத்தலும் ஒன்று. உறுவன் - மிக்கவன்; பெரியவனுமாம். கருவாணை யுறுதல் - பிறப்பிறப்புக் குள்ளாதல். கருவாள் நையுற எனப் பிரித்து வலிய வாளால் வருந்தும்படி, உயிர்தின்ற உடம்பினைக் கடிந்துண்ணும் கருத்தனேல் எனப் பொருளுரைத்தலுமாம். உயிர் நின்ற உடம்பைக் கொன்றுண்ணும் கொடிய கருத்துடையவனை, “கருவாணை யுற இரங்காது கடித்துண்ணும் கருத்தன்” என இசைக்கின்றார். பிறப்பும் இறப்பும் திருவருளாணை வழி நிற்பன. “போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்கும்” என்பது சிவஞான போதம். தன்னாணையினும் பெற்றோ ராணையினும் குருவாணையும் சிவத்தின் ஆணையும் வலி மிக வுடையது என்பது கொண்டு, “குருவாணை எமது சிவக் கொழுந்தாணை” என வற்புறுத்துகின்றார் ஞானி, ஞானவான்.

     இதனால், புலாலுண்போன் எத்துணை யாற்றலும் ஞானமும் உடையனாயினும், ஞானி யெனப்படல் பொருந்தாது என வற்புறுத்தவாறாம்.

     (1)