1. அன்பு மாலை

    அஃதாவது, இறைவன்பால் உண்டாகிய அன்புப் பொருளாகப் பாடிய சொன்மாலை யென்பது. இதன்கண், தமக்கு உண்டாகும் விருப்பு வெறுப்புக்கள் இறைவன் திருவருளால் உண்டாவன என்பதும், துன்பத்தால் துயருற்று மனம் தூயனாகிய நிலையில் அன்புகூர்ந்து மெய்யுணர்வு நல்க வேண்டுமென முறையிடுவதும், துக்க நிவர்த்திக்குரிய திருவருளை நல்குக என முறையிடுவதும், மனத்தின் பெருமை சிறுமை பாராமல் அடியவனாக ஏற்றருள்க என வேண்டுவதும். திருநெறியும் பெருநெறியும் மேற்கொள்ளும் பெற்றிமை தமக்கு இல்லையாதலால், திருவருள் நெறியைத் தந்தருள்க என வேண்டுவதும், அம்மையில் தோன்றிய பத்திமை இம்மை மறுமைகளில் தொடரும் என்றறிந்து மகிழ்வதும், திருவருள் ஞானத்துக்கு பக்குவா பக்குவம் காண்டல் வேண்டா என்று கேட்டுக்கொள்வதும், பலவகையால் அருள் செய்யும் இறைவனுக்கும் அவ்வருளைப் பெறும் தமக்குமுள்ள உறவு முறையை ஆராய்வதும், திருவருள் யோகானுபவம் தெரிவிப்பதும் பொருட் செல்வத்தோடு அருட்செல்வமும் அளித்தல் வேண்டுமென முறையிடுவதும், இளமைப் பருவத்திலேயே தாம் திருவருள் நெறி நின்று பாடுதற்கு அமைந்த தவம் யாதாமென ஆராய்வதும் பிறவும் ஓதப்படுகின்றன.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3029.

     அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
          ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
     கற்பதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
          கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
     வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே
          வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
     பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்
          பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.

உரை:

     அற்புதமான பொன்னம்பலத்திலே ஆடல் புரிகின்ற அருளரசே, பெறற்கரிய அமுதமே, திருவடியை நினைந்தொழுகும் என்னுடைய அன்புருவே, என்னுடைய அறிவுக் கறிவே, ஞானக் கல்வி வழங்கும் பெரிய கருணைக் கடலே, எனக்குக் கண்ணாகியவனே, கண் பொருந்திய நெற்றியை யுடைய கடவுளே, இன்பத்தால் உள்ளத்தில் உண்டாகும் மகிழ்ச்சியே, உண்மைக் கதியானவனே, மலையரையன் பெற்ற பசிய கொடி போல்கின்ற உமாதேவி பொருந்தி யுள்ள பெரிய மரம் போல்பவனே, வேதங்களுக்கும் சிவாகமங்களுக்கும் முடிவாய் ஞானவொளி செய்யும் விளக்காகியவனே, அழகமைய இந்த உலகில் இருக்கின்ற சித்தனாகிய எனக்குள்ள பொருத்தம் நின் திருவருளாகிய பொருத்தம், காண் எ.று.

     ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் அற்புதக் கூத்தாடுமிடமாகலின், “அற்புதப் பொன்னம்பலத்தே ஆடுகின்ற அரசே” என்றும், அரியணைக்கண் அமர்ந்து ஆளு மரசர் போலாது, அம்பலத்தில் நின்று ஆடுமாற்றால் உயிர்கட்கு அருள் புரிகின்றமை பற்றி, “அம்பலத்தில் ஆடுகின்ற அரசே” என்றும் கூறுகின்றார். கடல் கடைந்து அரிதிற் பெற்றுண்ணும் தேவரமுதம் போலின்றி, ஞானத்தாற் கண்டு பரவி, இன்புறும் அமுதமாதல் விளங்க “ஆரமுதே” என்கின்றார். அடியேன், திருவடியையே பற்றாகக் கொண்டு அதனையே அன்புடன் நினைத்தொழுகுபவன். தான் செய்யும் அன்பு உருவில்லதாயினும், அது தானே உருக் கொண்டாற் போல்பவ னென்றற்கு “அடியேன் தன் அன்பே” என உரைக்கின்றார். அறிவுக் கறிவாய் நின்று அறியாதன அறியச் செய்தல் தோன்ற, “என் அறிவே” எனச் சொல்லுகின்றார். “அறி நீர்மையி லெய்தும் அவர்க் கறியும் அறிவருளும் குறிநீர்மையர்” (இடும்பா) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. கற்பு, கற்றற்குரியன் கற்க எய்தும் மனத் தெளிவு கற்பெனப்படுகிறது; அதனைப் பெறுதற் குதவும் திருவருள் நலத்தைக் “கற்புதவு பெருங் கருணைக் கடலே” எனப் பரவுகின்றார். “கல்லாதன வெல்லாம் கற்பித்தானைக் காணாதன வெல்லாம் காட்டினானைச் சொல்லாத வெல்லாம் சொல்லியென்னைத் தொடர்ந்திங்கு அடியேனை யாளாக் கொண்டான்” (பூந்துருத்தி) எனத் திருநாவுக்கரசர் கூறுவ தறிக. காணாதன காட்டுவது பற்றி, “என் கண்ணானே” எனவுரைக்கின்றார். “காட்டாதன வெல்லாம் காட்டி” (அம்மா) என்பது திருவாசகம், ஆனந்தம் காட்சியாகவும் அதன் பயனாகும் மகிழ்ச்சி அனுபவமாகவும் அமைதலால், ஆனந்தமென் றொழியாது, “ஆனந்தக் களிப்பே” என அறிவிக்கின்றார். மெய்க்கதி, மெய்ம்மை சான்ற சிவகதி. ஏனைக் கதிகள் பலவற்றிலும் சிவகதி நிலைபேறுடையதாகலின், “மெய்க் கதி” என விளம்புகிறார். வெற்பு, இமயமலை. பசுமை நிறமும் கொடி போல் உருவும் கொண்டமையால் உமாதேவியை “வெற்புதவு பசுங்கொடி” என்றும், பொன் மரத்திற் பச்சைக் கொடி படர்ந்திருத்தல் போல உமை தழுவிய சிவபெருமான் திருமேனி திகழ்வது விளங்க, “பசுங் கொடியை மருவு பெருந் தருவே” எனப் புனைந்துரைக்கின்றார். தரு-மரம் தேவ முடிவிலும், சிவாகம முடிவிலும் பரஞான வொளி செய்தல் தோன்ற, “வேதவாகம முடிவில் விளங்கு மொளி விளக்கே” எனக் கூறுகின்றார். சித்தன், சித்தத்தையுடையவன்; பல்வகைச் சித்துக்களை யுடையவன் என்றுமாம், எவ்வுலகிலும் சென்று திரியும் சித்தனுக்கு வேறாக நான் இவ்வுலகிலே திரியும் சித்தனாயினேன் என்பாராய், “பொற்புறவே இவ்வுலகிற் பொருந்து சித்தனானேன்” எனவும், இது நின் திருவுளத்துக்கு ஒத்ததாமோ என்பாராய், “நின் திருவருளின் பொருத்தம் அதுதானே” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், பல்வகைச் சித்துடையனாதல் திருவருட்குப் பொருத்தந் தானே என வினவியவாறாம்.

     (1)