3030.

     நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
          நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
     கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
          கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
     பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
          பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
     குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
          குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.

உரை:

     நிறை கொண்ட சிவகாமி யம்மையின், அன்பு நிறைந்த ஒளிப் பொருளும், என்றும் குறைவிலா நிறைவாகும் சுத்த சிவாகாயமே, விடக் கறை பொருந்திய கழுத்தையுடைய அருளரசனும், முக்கண்களையுடைய கரும்பு போல்பவனும், கற்கண்டும் கனியும் போல் இனிப்பவனும் எனக்குக் கண்ணும் கண்ணினுள் மணியும் ஒப்பவனும், பிறைத் திங்களைத் திருமுடியிற் கொண்ட மலை யொப்பவனும், பெரிய கருணைக் கடலானவனும், பெரியவராயினார் எல்லாரும் வணங்கி வழிபடும் பெரிய பரம்பொருளாயவனும் ஆகிய சிவபெருமானே, குறைகள் மிகப்பல வுற்று உலகில் திரிகின்ற என்னுடைய குறைகள் அனைத்தையும் போக்கிக் குற்றங்களை நீக்கி, என் பிறவிக் குணமாகக் கொண்டருளுவது நினது பெருங் குணமன்றோ. எ. று.

     நிறை - பொறி புலன்களின் போக்கிற் போக விடாது நெஞ்சினை நிறத்தும் உரனுடைமை; திண்மையுமாம். நிறைவே சிவகாமிக்கு உயரிய அணிகல னென்றற்கு “நிறை யணிந்த சிவகாமி” எனத் தெரிவிக்கின்றார். நேயம் - அன்பு. சோதியுருவினனாதலால் “சோதி” என்று கூறுகிறார் “சோதி யந்தமாயினாய் சோதி யுள்ளோர் சோதியாய்” (ஆலவாய்) என்று பெரியோர் உரைப்பது காண்க. பரிபூரணம் - முழு நிறைவு. நிறைவு குறைதலும் குறைவு நிறைதலும் உலகியலில் நாளும் நிகழ்தலின், பரம்பொருட்கு அஃது இல்லை யென வற்புறுத்தற்கு, “நித்த பரிபூரணம்” என்கின்றார். சுத்தமாகிய சிவம் சுத்த சிவமெனப்படுகிறது. இதனைத் தொல்காப்பியர் இனச் சுட்டில்லாப் பண்பு கொள் பெயர் என்பர். சிவம் விளங்கும் பரவெளியைச் “சுத்த சிவவெளி” எனப் புகழ்கின்றார். கறை - கடல் விடத்தை யுண்டதனால் கழுத்திற் படிந்த கருமை நிறம். பொன்னிறத் திருமேனியில் கழுத்திற் கறை ஓராற்றால் அழகு செய்தலால் “கறை யணிந்த களத்தரசே” எனப் போற்றுகிறார். “கறை மிடறு அணியலும் அணிந்தன்று” (புறம்) எனச் சான்றோர் கூறுவ தறிக. கரும்புக்குக் கண் (கணு) உண்மையின், கண்ணுடைய சிவனைக் “கண்ணுடைய கரும்பே” என்கின்றார். நினைவார்க்கு நினைக்குந் தோறும் இனிமை நல்குதலால், “கற்கண்டே கனியே” என மொழிகின்றார். உலகுக்குக் கண்ணாயும், கண்ணுடையார் கண்ணுள் மணியாயும் இருந்து காண்பன காணவும் காட்டவும் உதவுதல் பற்றி, “என் கண்ணே கண்மணியே” என்று புகழ்கின்றார். பொன்மலை போல் மேனியும் திருமுடியிற் பிறையும் கொண்டு விளங்குதலால், “பிறை யணிந்த முடி மலையே” எனப் போற்றுகிறார். சிவனை மலை யென்று சொல்லுகிறார். நிலையிற் சலியாமை பற்றி, கொள்ளக் குறை படாமையால் “கட” லென்றும், வழங்கத் தவறாமையால் “பெருங் கருணை” யென்றும் சிறப்பிக்கின்றார். பெரியவர் - செயற் கரிய செய்து பெருமை பெற்றவர். அறிவானவர்க்கும் அறியாமை நின்ற பரமனாதலின், “பெரியவரெலாம் வணங்கும் பெரிய பரம்பொருளே” எனப் பகர்கின்றார். “அன்றின்றோ டென்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரன்” (தென் திருமுல்லை) என ஞானசம்பந்தப் பெருமான் இனி தெடுத்துரைப்பது காண்க. உயிர்ப்பொருள் உயிரில் பொருள்கள் அனைத்துக்கும் மேலாயதால், “பரம்பொருள்” என்றும், எல்லாப் பொருள்களையும் தனக்குள் ஒடுக்கியும், மீளத் தோற்றுவித்துத் தன் வியாபகத்துள் நிலவச் செய்தலும் உடைமையால் “பெரிய பரம்பொருளே” என்றும் இயம்புகிறார். வேதங்களில் மந்திரங்களாலும் பிராமணங்களாலும் கூறப்படும், தெய்வப் பொருள்கள் அனைத்திற்கும் பெரிதாக உபநிடதங்கள் உரைக்கும், பிரமப் பொருள் என்பதை விளக்கப் “பெரிய பரம்பொருள்” எனக் குறிக்கின்றார். பிரமத்தைப் பெரிய பொருளெனவும். தத்துவமசி என்னும், உபதேச மந்திரத்தை மகாவாக்கிய மென்றும் உரைப்பது தமிழ் மரபு. இவ்வாறே அகம்பிரமாஸ்மின் என்னும் பாவனை மந்திரம் சிவோகம் பாவனை என்று வழங்கும் என அறிக. மலப்பிணிப்பால் உளதாகிய குறைபாட்டால் உலகிற், பிறந்து உழலுமாறு புலப்பட, “குறையணிந்து திரிகின்றேன்” எனவும், குறைகள் குற்றத்துக் கேதுவாதலின் அக்குறைகளை நிறைவு செய்து போக்கி, குற்றங்கள் பிறவிக் குணமாம் எனக் கொண்ட விடத்து, வெகுளியும் ஒறுக்கும் உள்ளமும் உளவாகா வாதலின், குறைகளெலாம் தவிர்த்தே குற்றமெலாம் குணமாகக் கொள்வது நின் குணமே” என உரைக்கின்றார். குணமே என்ற ஏகாரம், குணமன்றோ என்ற பொருள் பட வந்தது.

     இதனால், குறைகளைத் தவிர்த்துக் குற்றங்களைக் குணமாகக் கொண்டு, அருள் புரிக என வேண்டிக் கொண்டவாறாம்.

     (2)