3031.

     ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
          ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
     மாண்பனைமிக் குவந்தளித்த மாகருணை மலையே
          வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த வாழ்வே
     நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
          நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
     வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
          விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.

உரை:

     ஆண் பனை மரத்தைப் பெண் பனையாக்கியும், எலும்புக்கூட்டை அழகிய பெண்ணாக்கியும், அருளாற் கூடிய திருமணத்துக்கு வந்தாரனைவரையும், சிவவொளி யுடையராக்கியும் சிறப்பித்த, மாண்புடைய திருஞானசம்பந்தருக்கு, மனமுவந்து அருள் புரிந்த பெரிய கருணைமலையே, எனக்குற்ற வருத்தங்களைப் போக்கி, எனக்குநல்வாழ்வையளித்த வாழ்முதலாவனே, அன்புடைய தாயும் தந்தையும் சற்குருவுமாய், நாயனைய அடிமையாகிய என்னுடைய மனத்தில் எழுந்தருளும் நாயகனே. பயனின்றிப் பனை போல் உயர வளர்ந்து வீணுக் குழைக்கின்றேனாயினும் என்னுடைய விருப்பம் யாவும், நின் திருவருட் பேற்றின்கண்ணன்றி இல்லை. காண். எ.று.

     திருவோத்தூரில் ஆண்பனையைக் குலையீனும் பெண்பனையாக்கியும் திருமயிலாப்பூரில் குடத்திற் பெய்து வைத்த எலும்புக் கூட்டை, அழகிய பெண்ணாக்கியும், திருவருளாற் கூடிய தன் திருமணத்துக்கு வந்தவர்களைச் சிவவொளியிற் கலப்பித்தவருமாகிய திருஞானசம்பந்தரை, “மாண்பன்” என்று சிறப்பிக்கின்றார். ஆண் பனையைப் பெண் பனையாக்கிய திறத்தைக் “குரும்பை ஆண்பனை யீன் குலை யோத்தூர் அரும்பு கொன்றை யடிகள்” (ஓத்தூர்) என ஞானசம்பந்தரே கூறுகின்றார். என்பு பெண்ணாகிய செய்தியை, “மதி சூடும் அண்ணலார் அடியார்தமை யமுது செய்வித்தல் கண்ணினாலவர் திருவிழாப் பொலிவு கண்டார் தல் உண்மையா மெனில் உலகர் முன் வருகென வுரைப்பார்” எனவும், “குடம் உடைந்தெழுவாள் போல் போற்று தாமரைப் போதவிழ்ந்தெழுந்தனள் போன்றாள்” (ஞானசம்) எனவும், சேக்கிழார் உரைப்பது காண்க. அங்கம் - என்பு. அங்கனை, பெண். அருள் மணம், சிவத்தின் திருவருள் எய்துறும் திருமணம். திருமணத்துக்கு வந்திருந்தோர் அனைவரும் சிவப் பேறு எய்தினமையின், “அனைவரையும் ஒளியாக்கும் மாண்பன்” எனத் திருஞானசம்பந்தரைப் புகழ்கின்றார். மாண்பு - சிவப் பேறு அருளும் நலம். மண்ணில் வாழப் பிறந்தார்க்கு வருத்தங்கள் தடையாதலின், அவர்தம் அறிவின்கண் தங்கிப் போக்கிச் சிறப்புறுதற்கு வேண்டும் உதவி நல்கும் ஒட்பத்தை வியந்து “வருத்த மெலாம் தவிர்த்து வாழ்வளித்த வாழ்வே” என்று போற்றுகின்றார். நாண்பு - நண்பு; மிக்க அன்பு. நண்பு எதுகை பற்றி நாண்பென நீண்டது, அனை, அன்னை, அன்புக்குத் தாயாகவும், அறிவுக்குத் தந்தையாகவும், ஞானந்துக்குக் குரு முதல்வனாகவும் உள்ளத்தில் உணர்வுருவாய்யுதவுதலால், “அனையும் தந்தையும் நற்குருவுமாகிய நாயடியேன் உள்ளகத்து நண்ணிய நாயகனே” என நவில்கின்றார். உள்வலி யில்லாமை பற்றிப் பனையை “வீண்பனை” எனவும், பயனில் செயல் புரிவது தோன்ற, “விழற்கிறைப்பேன்” எனவும், வாழ்வார் வாழ்தற்கு நினைவு மொழி மெய்யாகிய கரணங்களை இயக்குவது கொண்டு, “விருப்பமெலாம் நின் அருளின் விருப்பமன்றி யிலையே” எனவும் கூறுகிறார்.

     இதனால், தமக்குள்ள விருப்பங்கள் திருவருள் இயக்கத்தால் உளவாவன எனத் தெரிவித்தவாறாம்.

     (3)