3032.

     சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
          செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
     உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்
          உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
     இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்
          இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
     சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்
          துயர் தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே.

உரை:

     தூய நிலையாய அன்பர்களுக்கும், என்னைப் போன்ற எளியவர்க்கும் எய்தும் துன்பங்களைப் போக்கும் பொருட்டு அழகிய அம்பலத்தின்கண் விளங்கும் திருக்கூத்தை யாடும் அருளரசே, மனத்தின்கண் மிகப்பல எண்ணங்களை யுற்று எங்கும் திரிந்து வருந்தும் சிறுமைப் பண்பால் செய்யும் செயல் வகைகளை யறியாமல் மருளுகின்றேன்; தெளிவு நல்கத்தக்க துணை வரும் உத்தமனாகிய உன்னை யன்றி வேறு ஒருவரும் எனக்கு இல்லை; உனது ஆணையாகக் கூறுகிறேன்; இது உண்மை; இத் துக்கங்களையும் இவற்றால் உண்டாகும் கலக்கங்களையும் இனி என்னால் தாங்க வொண்ணாது; என்பால் இரக்க முற்று இப்பொழுதில் அருளொளி நல்குதல் வேண்டும். எ.று.

     சுத்தமன் நேயத்தவர் - தூய நிலை பெற்ற அன்பர். சுத்த மின்மையும் பொய் யன்பும் உடைய எளியேன் என்பாராய், “எனைப் போலும் அவர்க்கும்” என வுரைக்கின்றார். மன்றில் நின்றாடும் கருத்து, தூய்மையால் உயர்ந்தவர்க்கும் அஃது இல்லாமையால் எளிமை யுற்றவர்க்கும் அருள் செய்வதாம் என்பது விளங்க, “துயர் தவிர்ப்பான் மணி மன்றில் துலங்கும் நடத்தரசே” என்று சொல்லுகின்றார். சிந்தனை மிகப் பல செய்து செயலில் திடமின்றி அலையும் சிறுமை பற்றி, “சித்தம் அநேகம் புரிந்து திரிந்து உழலும் சிறியேன்” என்றும், அதனால் தெளிவாகப் பயன்தரத் தக்க செயல்களைச் செய்ய மாட்டாது திகைப்பது புலப்பட, “செய்வகை யொன்றறியாது திகைக்கின்றேன்” என மொழிந்தும், “அந்தோ” என இரங்கியும் வருந்துகின்றார். இந் நிலையில் திட சித்தமும் செய்வினைத் திறமும் தந்து உதவுபவர் துணை யில்லாமை கண்டு, “ உத்தமனே உன்னையல்லால் ஒரு துணை மற்றிறயேன்” எனவும், தாம் உரைப்பது பொய்யுமன்று புனைந்துரையுமென்று என்றற்கு “உன்னாணை உன்னாணை உண்மையிது கண்டாய்” எனவும் இசைக்கின்றார். தமனேயச் சலனம், தமன் நேயம் சலனம் என்று பிரிந்து தேமா குணம் காரணமாக வுளவாகும் துக்கங்கள் விளைவிக்கும் கலக்கம் எனப் பொருள் படுகிறது. தமம், தமன் என வந்தது. நிர்க்குணனும் நின்மலனுமாதலால், சிவபெருமான் பால் முறையிடுகின்றாராதல் பற்றி, “இத் தமனேயச் சலனம் இனிப் பொறுக்க மாட்டேன்” என்றும், திருவருள் ஞான விளக்கம் தந்து என்னையுய்வித்தல் வேண்டும்” என்பார், “இரங்கி யருள் செயல் வேண்டும்” என்றும், நன்கு காய்ச்சப்பட்ட பொன் போல துன்பத்தால் சுடப்பட்டுப் பக்குவ முற்றிருக்கின்றேன் என்பாராய், “இதுதருணம் எந்தாய்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், துன்பத்தால் துயருற்று மனம் தூயனாகிய இந்நிலையில் எனக்கு மெய் யுணர்வு நல்குவது நேரிது எனத் தெரிவித்துக் கொண்டவாறாம்.

     (4)