3033. துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.
உரை: ஒப்பற்ற அம்பலத்தின் கண் திருநடம் செய்யும் திருவடியாகிய தாமரையையுடைய எந்தையே, பவளம் போலும் செம்மை நிறம் பொருந்திய திருமேனியுடன் ஒளி செய்கின்ற மணிச்சுடர் போன்றவனே. துரியத்தில் காணப்படும் வெளியின்கண் விளக்க மிகும் சுத்த சிவவெளியே, கங்கை தங்கிய சடையையுடைய முடிகொண்ட எங்கள் இன்ப மலையே, திருவருளாற் கடல் போன்றவனே, எனக்குக் குருவே, என்னை யாண்டருளும் தலைவனே, அருளரசே, இத்துன்பங்களை நுகர என்னால் முடியாது; எனக்குத் துரையே, என்பால் இரக்க முற்று அருள் செய்க; யான் தவறுகள் செய்பவனாயினும் என்னைக் கைவிட நினைத்தலின்றி அருளாதரவு செய்தற்கு இஃது ஏற்ற காலமாகும் காண். எ.று.
துப்பு - பவளம். சிவன் திருமேனி பவள நிற முடையதாகலின், “துப்பாடு திருமேனி” எனச் சிறப்பிக்கின்றார். “பவள மேனியர் திகழும் நீற்றினர்” (பல்லவனீச்) என்று பெரியோர் குறிப்பது காண்க. மணிச் சுடர் - மாணிக்க மணியின் ஒளிக் கதிர். அதுவும் செம்மை நிறமுடைய தாகலின், பவள மேனிக்கண் எழும் ஒளிச் சுடரை, “மணிச்சுடர்” என வழங்குகிறார்; மணி - அழகுமாம். துரிய வெளி - உந்தியிடத்தே; மனம் கருவியாக ஞானக் கண்ணாற் காணுமிடம். வானமும் - ஆண்டு ஒளிரும் சூரியனும் போலத் துரியவெளியும் சிவமும் நோக்கப் படுவது பற்றி, “துரிய வெளிக்குள்ளிருந்த சிவவெளியே” எனக் கூறுகின்றார். சிவ சூரியன் திகழும் ஞானாகாயம், “சித்த சிவவெளி” எனப்படுகிறது. சுத்த சிவம் - சுத்த மாயா தத்துவத்தின் மத்தகத்தில் ஞானாகாரமாய் நிலவும் சிவாகாசம். “அத்துவித மென்ற அந்நியச் சொற்கண்டுணர்ந்து சுத்த சிவத்தைத் தொடரும் நாள் எந்நாளோ” (எந்நாட்) எனத் தாயுமானார் காட்டுவது நோக்குக. அப்பு - கங்கை நீர். உலகியலின்பம் போல் நிலையின்றி மறைவது போலாது நிலையிற் சலியாமை புலப்பட, “ஆனந்த மலை” என்று இயம்புகின்றார். அருள் ஞான வொளி நல்கி மலம் செய்யும் இருளைப் போக்குதலால், “குருவே” எனக் கூறுகிறார். உலகுடல் நுகர்வுகளைத் தந்தருளுதலால் “என் ஆண்டனே” என்றும், முறை செய்து காத்தலின் “அரசே” என்றும் பரவுகின்றார். பாடு - துன்பம். முடியாமை, தாங்க மாட்டாமை. துரை, காப்பாற்றும் கடமை மேற்கொண்ட தலைவன். அரசாட்சியை மக்கள் “துரைத் தனம்” என வழங்குவது காண்க. இடைக்காலத்தர், அதிகாரியைத் துரையென்னும், அதிகாரத்தைத் துரைத்தனம் என்றும் வழங்கினர், தப்பாடுதல் - தவறு செய்தல். விடல் - கைவிடுதல். துணிதல் - கருதுதல். “தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருட்டாகும்” என்பது தொல்காப்பியம். நடம் புரியுமிடத்து, திருவடிகளே தாள வறுதி செய்து பொலிவுறுத் தவதால் “நடம் புரியும் தாள் மலர் எந்தாய்” எனச் சாற்றுகின்றார். தாள்மலர் திருவடியாகிய தாமரை மலர். துரியத்தில் அமர்ந்து சிவாகாசத்திற் சிவனைக் கண்டு மகிழும் பக்குவம் தமக்கு எய்தினமை தோன்ற, “இது தருணம் கண்டாய்” என்று சொல்லுகின்றார்.
இதனால், துக்க நிவர்த்திக்குரிய திருவருள் நல்குக என முறையிட்டவாறாம். (5)
|