3034. கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே
கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே
விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே
விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே
பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே
பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே
எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்
என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே.
உரை: கண் பொருந்திய நெற்றியையுடைய கரும்பும், அக் கரும்பின்கண் நிறைந்து இனிக்கும் சாறு போல்பவனே, அச் சாற்றிற் பெறப்படும் கற்கண்டும் சர்க்கரையும் ஒப்பவனே, வானத்தின் கண் உயர்ந்து விளங்கும் ஞாயிறாகிய ஒளிப் பொருளே, அவ்வொளிக்குள் ஒளிரும் சுடரே, எருதை யூர்தியாக வுடையவனே, சடையை யுடையவனே, வேதங்களின் முடிபொருளாகியவனே, பெண்ணாகிய உமையமர்ந்த ஒருபாகத்தாற் பெருமையுறும் பெருந்தகையே, பெரிய மானை ஒரு கையிற் ஏந்துகின்ற பெருமை சான்ற பெருமானே, எண்ணத்தால் மிக்க சிறியவனாயினும் நினக்கு அடியவனாதலால் என்னைக் கைவிட நினைக்காமல் நினது திருவருளைத் தந்தருள்க. எ.று.
கரும்புக்கும் கண் (கணு) ணுண்டாதலால் அதனிற் சிறப்பித்தற்குக் “கண்ணோங்கு நுதற் கரும்பே” என்று கூறுகின்றார். இனிமை பற்றிக் கரும்பின் சாற்றை “அமுது” எனவும். அச்சாற்றைத் தூய்மையுறக் காய்ச்சி யாவன செய்வதால் கற்கண்டும் சர்க்கரையும் பெறப்படுவது பற்றி, “கற்கண்டே சர்க்கரையே” எனவும் இயம்புகின்றார். விண் - வானம், வானத் துச்சியில் நின்று திகழ்வதனால், ஞாயிற்றை, “விண்ணோங்குவியன் சுடரே” என்றும், அச்சுடர்க்குச் சுடரொளி தரும் சுடர்ப் பொருளாதலால் சிவத்தை “வியன் சுடர்க்குட் சுடரே” என்றும் குறிக்கின்றார். விண்ணில் விளங்கும் ஞாயிறு நாண்மீன் முதலியன வெம்மை மிக்க ஒளிப் பொருள் என விஞ்ஞானப் புலமை விளம்புகின்ற தெனினும், அதன் ஒளி வகைக்கு ஒளி நல்கும் மூல வொளியாகிய சிவத்தைத் தனக்குரிய நெறியில் இன்னும் கண்டிலாமை வருந்தத்தக்கது. “ஓதியாரும் அறிவாரில்லை ஓதியுலகெலாம் சோதியாய் நிறைந்தான் சுடர்ச் சோதியுட் சோதியான்” (ஐயாறு) என ஞானசம்பந்தர் உரைக்கின்றார். ஒளியை ஒலியாகவும், ஒலியை ஒளியாகவும் மாற்றவல்ல இந்நாளைய விஞ்ஞானம், ஒளிக் கற்றையைத் தனித் தனிப் பிரித்து ஒவ்வொன்றையும் வெவ்வேறாக வகுக்கின்றதாயினும், மூல வொளியைக் காணாமை ஈண்டு நினைக்கத் தக்கதாகிறது. விடை - எருது. சிவனுக்கு ஊர்தியும் கொடியுமாதலால் “விடையவன்” எனப் பொதுவாகக் கூறுகின்றார். வேத நூல்களில் ஆழ்ந்து அகன்று நுண்ணிதாய் முடிபொருளாய் மொழியப்படுவது கொண்டு, “வேத முடிப் பொருள்” என்றும், பழம் பொருளதாகிய வேதத்தினும் நுண்பொருளதாகிய உபநிடதம் சிறந்து நிற்பது பற்றி, அது வேதமுடி - வேதாந்தம் என வுரைக்கப்படும். அவ்வேதாந்தம் சிவபரம்பொருளைப் பிரமம் என்றலின், “வேத முடிப்பொருளே” எனப் புகல்கின்றார். “ஏகமேவாத் விதீயம் பிரமம்” என்று சாந்தோகியம் உரைப்பது காண்க. உமையொரு கூறனாதலால், “பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்கு பெருந்தகையே” எனவும், ஆணுக்குப் போலப் பெண்ணுக்கும் ஒத்தவுரிமையுற்ற வாழ்வளித்தலால் “பெருந்தகை” எனவும் இயம்புகின்றார். “ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருணல்கிச் சேணின்றவர்க்கின்னம் சிந்தை செயவல்லான்” (நாகைக்கா) எனச் சான்றோர் கூறுவர். முனிவர்கள் தம்முடைய வேள்வியில் எழுப்பி விடுத்த பெருமையுடைய தென்றற்குப் “பெருமான்” என்றும், அப் பெருமையெல்லாம் கெட அடக்கியொடுக்கி ஒருகையில் ஏந்தி வைதிகத் தீ வேள்வியின் பயனின்மையை வெளிப்படுத்தினமை இனிது விளங்க, “பெருமானை ஒருகரங் கொள் பெரிய பெருமான்” என இசைக்கின்றார். ஒருவர்க்குண்டாகும் பெருமை சிறுமைகட்கு அவருடைய மன நினைவுகள் காரணமாதலால், “எண்ணோங்கு சிறியவனேன்” என்றும், இறைவன் திருவடியை நினைவிற் கொண்டு அடியவனாய பின், பெருமை சிறுமை முதலிய வேறுபாடு காண்டல் வேண்டாவாதலால், “நின்னடியேன் என்னைவிடத்துணியேல் நின்னின்னருள் தந்தருளே” என்றும் இயம்புகின்றார்.
இதனால், மனத்தின் பெருமை சிறுமை பாராமல் அடியவனெனக் கொண்டு அருள் புரிக என விண்ணப்பித்தவாறாம். (6)
|