3035.

     திருநெறிசேர் மெய்அடியார் திறன்ஒன்றும் அறியேன்
          செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்
     கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்
          கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்
     பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்
          பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ
     வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே
          மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே.

உரை:

     அம்பலத்தை யுரிமையாகவுடைய பெருமானே, திருநெறியை மேற்கொண்டொழுகும் மெய்யடியார்களின் தகுதி யொன்றையும் அறிந்து மேற்கொண்டில்லேன்; செறிவும் அறிவும் என்பால் இல்லை; அதனாற் செய்தற்குரிய செயல் வகையும் அறிகிலேன்; பிறவிக் கேதுவாகிய நெறியிற் கிடந்து வருந்துகின்ற, கீழ்மக்களிற் கீழானவனாயினேன்; கற்பன கற்கின்றேனாயினும் சாகாமைக் கேதுவாகிய கல்வியின் இயல்பைக் காண்கின்றேனில்லை; பெருமை சான்ற நெறியின் பயனாகிய மெய்ஞ்ஞான சித்தி பெற்று, அதன்கண் நிலைபேறு வேண்டிப் பல பல பிதற்றுகின்றேனாயினும், அப் பேற்றுக்குரிய தன்மை என்னிடம் இல்லை; அற்றாக, நினது திருவருள் எய்தும் நெறியில் என்னை வலிய ஆட்கொண்டனையாதலால் நினது அருள் ஞானத்தை எனக்கு வழங்குக. எ.று.

     மன்று, ஆடரங்கு; அதற்குரியவன் கூத்தப் பெருமானாதல் பற்றி, “மன்றுடைய பெருவாழ்வே” என்று பேசுகின்றார். பெருவாழ் வளிக்கும் முதல்வனைப் பெருவாழ்வு என்று கூறுகின்றார். திருநெறி - சிவனை முழுமுதற் பொருளாகக் கொண்டு பாடியும் பணிந்தும் வழிபடும் செம்மை நெறி. மெய்யன்பர், திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள். அவர்கள் திறமாவது மெய்ம்மையான அன்புற் றொழுகுதல். அத்திறம் தம்பால் இல்லை யென்பாராய் “திறமொன்றும் அறியேன்” என்று இயம்புகிறார். சிவனை “வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடுவது புண்ணியம்” (வலஞ்சுழி) என ஞானசம்பந்தரும், சிவத் தொண்டர்க்குத் தொண்டு செய்தலும் புண்ணியமாம் என்பாராய், “எங்கள் புண்ணியன் தன்னடித் தொண்டராம் புண்ணியம்” (ஆரூர்) என்று திருநாவுக்கரசரும் விளங்க விளம்புவது காண்க. செறிவு - அடக்கம்; அறிவு, திருவருள் ஞானம். இரண்டும் காரிய காரணமாய் இயைவனவாதலின், “செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்” எனவுரைக்கின்றார். “சீலமின்றி நோன்பின்றி செறிவேயின்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேன்” (ஆனந்த) எனத் திருவாதவூரர் கூறுவது காண்க. கருசேர் நெறி, பிறந்திறந் துழலும் பிறவி நெறி. சீலமும் செறிவும் அறிவுமின்றிப் பல்வகைப் பிறப்புக்களில் பிறந்திறந்து, வருந்துவோரைக் கடையரென்றும், அவர்களிற் கீழ்ப்பட்டமை புலப்படக் “கருநெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையானேன்” என்றும் கலங்கிய மனத்துடன் உரைக்கின்றார். கற்பவை யாவும் காட்சி, கருத்து, இவ்விரண்டானும் முன்னோர் கண்ணுரைத்த உரை என்ற மூன்றாகும். இம் மூன்றும் பிறந்தோர் இறப்பதை ஒழிவின்றியுரைக்கின்றன; காட்டுகின்றன; நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும், பெருமையே உலகு கொண்டு பிறங்குகின்றது; என்றும் எங்கும் சாகாமை இல்லை. சாதலென்பது நின்றபினிவுடம்பின்றும் உயிர் நீங்குவது. இரண்டும் வேறு வேறு இனமாதலின் என்றேனும் ஒன்றினொன்று பிரிந்தே தீரும்; சாகாறையில்லை; அறிவும் ஆராய்ச்சியும் முயன்றால் சாதலை ஓரளவு தள்ளி வைக்கலாம். காலத்தால் மெலிவுறுவது உடலியல்பு; அறிவு அனுபவங்களால் வலியுறுவது உயிரியல்பு. உயிர் தனது வலிமையால் உடம்பின் மெலிவை மருந்துண்டு போக்கிச் சில காலம் சாவா திருக்கச் செய்யலாம். மருந்துக்கு ஆக்கமாகும் பொருள்கள் உலகில் நெடிதிருக்கும் பொருட் கூறுக ளாவதே அதற்குக் காரணம்; இந் நாளிற் புதிய புதிய மருந்தியல் வகையால் மக்களின் உயிர் வாழ்வு நீடித்திருப்பது இவ்வுண்மையை வலியுறுத்துகிறது இம் மருந்தியலின் வேறாக மந்திரங்களும் யோக நெறிகளும் உள வென முன்னோர் கூறுவர்; இவற்றைக் கற்றுணர்ந்து அவ்வுணர்வுக்குத் தக நிற்பது சாகாக் கல்வியாகும்; இதனைச் சாகாக் கலை எனவும், காய சித்தி எனவும் வழங்குவர். பல்லாயிர மாண்டுகட்கு முன்னிருந்த திருமூலர் முதலியோர் இந்தச் சாகாக்கலை வல்லுநர் என நூல்கள் கூறுகின்றன; சாகாமை பொருளாகப் பல பெரியோர்கள் எண்ணி முயன்றிருப்பதை வரலாறுகள் உரைக்கின்றன. சாவைத் தடுக்க விண்ணகத் தேவர்களும் முயன்றுள்ளதைப் புராணங்களும் புகல்கின்றன. 1936ஆம் ஆண்டு முடிவுற்ற மித்ரா சக்கரவர்த்தி - போவால் வழக்கு வலிய சான்று பகருகிறது. அது வருமாறு :

     டக்கா நாட்டுப் போவால் சமீன்தாரான இராசராசேந்திர நாராயண ராவ் பகதூர்க்கு இரண்டாம் மகனான குமார் இராசேந்திர நாராயணராவ் 1909ல் டார்ஜிலிங்கில் இறந்து போனார்; பன்னிரண்டு ஆண்டுகட்குப் பின்னர் 1921ல் ஒரு சாது வடிவில் அவர் தோன்றித் தாம் டார்ஜிலிங்கில் பகைவர்களால் நஞ்சூட்டப்பட்டு உணர்விழந்ததாகவும், தம்மை இறந்து விட்டதாகக் கருதிச் சுடு காட்டுக்குக் கொண்டு சென்று ஈம்ப்படுக்கையிற் கிடத்தி, இடி மின்னலொடு கூடிய புயல் மழை வரக் கண்டு அப்படியே கைவிடப் பட்டதாகவும், அங்கே நாகரினதுத் தவ முனிவர்கள் தம்மைக் கண்டு தாம் உறையுமிடத்துக்குக் கொண்டு போய்ச் சாவா மருந்தளித்து உய்வித்துத் தமக்கு மாணவராய்ப் பன்னீராண்டு வைத்திருந்து சமய வுணர்வு நல்கி 1921ல் தம்முடைய செல்வப் பெருமனைக்குச் செல்ல விடுத்ததாகவும் உரைக்கலாயினர். பின்பு, அவர் தம்முடைய அங்க அடையாளங்களையும், பிற செயல் வகைகளையும் நிகழ்ந்தாங்கு மொழிந்து தமக்குரிய சொத்தான மூன்றி லொரு பங்கைத் தருமாறு நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கு 1930ல் பதிவாகி டக்காவிலுள்ள மாவட்டத் தலைமை நீதி மன்றத்தில் ஆராயப்பட்டது; அவருடைய மனைவியான பீபாபதி தேவியார் எதிரியாக நின்று வழக்காடும் சாது, பஞ்சாப் நாட்டைச் சேர்ந்தசுந்தர்தாச நாகர் என்றும், இராமேந்திரரல்ல ரென்றும், டார்ஜிலிங்கில் இறந்துவிட்ட அவரைச் சுடுகாட்டில் வைத்துக் கொளுத்தி விட்டதாகவும் எடுத்தோதி வாதம் புரிந்தார்; போவால் சந்நியாசி வழக்கு என்ற பெயரால் இரண்டு ஆண்டு நடந்தது; வாதியாகிய இராமேந்திரர் பக்கம் 1069 பேர்களும் எதிரியான பீபாபதி தேவி பக்கம் 470 பேர்களும் ஆராயப்பட்டனர்; நிழற் படங்களும் எழுத்துச் சான்றுகளுமாக 2000க்கு மேற்பட்ட பதிவேடுகள் சான்றுகளாகக் காட்டப்பட்டன; வழக்கு முடிவு இராமேந்திர நாராயண ராவுக்குச் சாதகமாய்த் தீர்ப்பாயிற்று. பின்பு இவ்வழக்கு கலகத்தா உயர்நீதி மன்றத்திலும் பிரிவி கவுன்சி லென்ற மேனீதிமன்றின் மன்றின் கண்ணும் மறு வாராய்ச்சி செய்யப் பெற்றுச் சாது இராமேந்திர நாராயணராய்க்கே வெற்றி தந்தது. (மித்ரா சக்கரவர்த்தி - போவால் வழக்கு-1936) வழக்கு முடிந்த அந்த ஆண்டிலேயே சாது இராமேந்திரரும் மண்ணக வாழ்வைத் துறந்து விண்ணக வாழ் வெய்தினார்; செத்தாரை வாழ்விக்கும் இந்தச் சாகாக் கலை நாக நாட்டுத் துறவோரிடம் இன்னமும் உளது என்று அறிந்தோர் பலர் கூறுகின்றனர். இத்தகைய சாகாக் கலையை இதுகாறும் கற்ற நூல்களிலோ கற்கின்ற வற்றிலோ என்னாற் காண முடியவில்லை என்பாராய்க் “கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன்” என வருந்துகிறார். சாதலால் உண்டாகும் துன்ப நீக்கத்தினும் இன்பக் கேடு பெரிதாகலாலும், மெய்ஞ்ஞானிகளும் விஞ்ஞானிகளும் செத்து மறைவதால் அரசியற் சமுதாயப் பொருளாதாரங்கள் கெடச் செய்யும் துரோகங்கள் பெருகுவதாலும் சாகாக் கல்வி நிலை வடலூர் வள்ளற் பெருமானால் நாடப்படுகிறது; இது கருதுமிடத்துச் “சாதலின் இன்னாத தில்லை” (குறள்) எனத் திருவள்ளுவர் கூறியது எத்துணை மெய்ம்மை யுரையாகிறது காண்மின். செயல் வகைகளின் புன்மையைக் காண வுதவும் விஞ்ஞானத்தினும், உண்மை கண்டு உய்யு நெறி காட்டும் மெய்ஞ்ஞானம் மேன்மை யுடைய தென்றற்குப் “பெரு நெறிசேர் மெய்ஞ்ஞான சித்தநிலை பெறுவன் பிதற்றுகிறேன்” என வுரைக்கின்றார். மெய்ந்நூலறிவினும், செயல் வகையால் அதன் பொருண்மை கைவரப் பெற்று அதன் கண் நிலையாக நிற்றல் வேண்டும்; அதற்குரிய ஞான வாய்மையும் மனத்திண்மையும் எய்திற்றிலேன் என்பாராய், “அதற்குரிய பெற்றியிலேன்” என வருந்துகிறார். பெற்றி - தன்மை. கரு நெறியில் வந்த எனக்குத் திருநெறியும் பெருநெறியுமாகப் பல வுளவாதவும், இனி வருவது திருவரு ணெறியாதலின் அதன்கண் நிற்பாயாக என்பார் போல, “வருநெறியில் என்னை வலித்து ஆட்கொண்ட மணியே” எனவும், அதற்கு வேண்டுவது திருவருள் ஞான மென்பாராய், “வழங்குக நின் அருளே” எனவும் இயம்புகின்றார். மணி - மாணிக்க மணி.

     இதனால், திருநெறியும் பெருநெறியும் மேற்கொள்ளும் பெற்றிமையில்லையாதலால் எனக்குத் திருவருள் நெறியைத் தந்தருள்க என வேண்டியவாறாம்.

     (7)